முகப்பு
புதுதில்லி

தில்லி மெட்ரோ நஷ்டத்திலும் மத்திய அரசு பங்கெடுக்க வேண்டும்: கேஜரிவால் வலியுறுத்தல்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு (டிஎம்ஆர்சி) நஷ்டம் ஏற்பட்டால், அதில் மத்திய அரசும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 23 ஜனவரி 2019, 6:08 am IST
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு (டிஎம்ஆர்சி) நஷ்டம் ஏற்பட்டால், அதில் மத்திய அரசும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக தனது சுட்டுரையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் 50:50 என்ற வீதத்தில் பங்கு உள்ளன. இந்நிலையில், தில்லி மெட்ரோ ரயில் போக்குவரத்தால் ஏற்படும் லாபத்தில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, நஷ்டம் ஏற்பட்டால் முழுவதையும் தில்லி அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது. இது தில்லி மக்களுக்கு நியாயமானதா? நஷ்டத்திலும் 50 சதவீதத்தை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி அரசு கூறுவதில் என்ன தவறுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தில்லி மெட்ரோ நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு கடந்த டிசம்பர் 20 -ஆம் தேதி தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 104 கி.மீட்டர் அளவுக்கு ரூ. 46 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் தில்லி அரசின் பங்களிப்பு ரூ. 9,700 கோடியாக இருக்கும். இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில் "மெட்ரோ ரயிலால் ஏற்படும் நஷ்டத்தை தில்லி அரசு மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இது ஏற்புடையதல்ல. மேலும், ஜப்பான் இண்டர்நேஷனல் காப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து நான்காம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு பெறும் கடனையும் தில்லி அரசே ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதும் ஏற்புடையதல்ல என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக பதிலடி
தில்லி மெட்ரோ நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தில்லி அரசு தேவையில்லாத தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி: தில்லி மெட்ரோ நான்காவது விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தில்லி அரசு தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஜப்பான் இண்டர்நேஷனல் காப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து பெறும் கடனை அடைக்க முடியாது என்று மத்திய அரசு கூறவில்லை. தில்லி அரசு அக்கடனை அடைக்க முடியாமல் போனால், கடனை அடைக்க உதவி செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், தில்லி முதல்வர் கேஜரிவால் இது தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். மக்கள் பணியாற்ற விரும்புகிறாரா?இல்லை பொய்யான தகவல்களைப் பரப்ப விரும்புகிறாரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தில்லி அரசின் தாமதத்தால் தில்லியில் உள்ள கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அவர். தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "தில்லி மெட்ரோ தொடங்கப்பட்ட நாளில் இருந்து லாபகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், தில்லி மெட்ரோ ரயில் சேவையால் டிஎம்ஆர்சிக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்தில் மத்திய அரசும் பங்கெடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகக் கூறும் ஆம் ஆத்மி அரசு, அதிகளவு மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு முட்டுக் கட்டை போடுகிறது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.