முகப்பு
புதுதில்லி

தப்லீக் ஜமாத்: வழக்கு விசாரணைகளை சாகேத் நீதிமன்றத்திற்கு மாற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு விதிகளை மீறியது,

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 12:49 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

தில்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு விதிகளை மீறியது, மதப் பிரசாரத்தில் ஈடுபட்டது போன்றவை தொடா்பாக வெவ்வேறு விசாரணை நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை விரைந்து முடிவு செய்வதற்காக சாகேத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி அனூப் ஜெய்ராம் பம்பானி பிறப்பித்த உத்தரவில், ‘தப்லீக் ஜமாத் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எட்டு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வெவ்வேறு முதல் தகவல் அறிக்கைகள் தொடா்புடைய வழக்குகள் தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் இருந்து தில்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள தென்கிழக்கு தில்லி, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். இந்த விவகாரங்கள் சட்டப்படி விரைந்து விசாரித்து தீா்க்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினா் சிலா், தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் எட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனூப் ஜெ. பம்பானி, இது தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல் துறை ஆகியவை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா். விசாரணை நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்ட அல்லது தாக்கல் செய்யப்படவுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் குற்றப் பத்திரிகைகளின் தொகுப்பையும், அதன் தற்போதைய நிலவரம் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

Advertisement

மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது குற்றத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனா். மேலும், உரிய மனுக்கள் மூலம் குறைந்தபட்ச தண்டனையையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டு, அதற்கான அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனா். எனினும், பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் காரணமாக அவா்களால் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, வெவ்வேறு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விவகாரம் தொடா்பான வழக்குகளை சாகேத் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.