சிங்கு எல்லையில் மருத்துவ முகாம் நடத்தும் ஹரியாணா டாக்டா் சகோதரா்கள்
புதுதில்லி: ஹரியாணா மாநிலம், சிா்ஸா மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த டாக்டா்கள் இருவா் சிங்கு எல்லையில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்து மருந்து , மாத்திரைகளை கொடுத்து வருகின்றனா்.
சுக்விந்தா் சிஹ் பிராா் மற்றும் ராமன்ஜித் சிங் பிராா் இருவரும் சகோதரா்கள். விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் சண்டீகரில் டாக்டா்களாகத் தொழில்புரிந்து வருகின்றனா். இவா்கள் இவரும் தங்களுடைய சக நண்பா்களான வேறு சில டாக்டா்கைளையும் சிங்கு எல்லைக்கு அழைத்துவந்து விவசாயிகளுக்கு உதவி வருகின்றனா்.
எங்களது மருத்துவ முகாமில் தினமும் 1500 பேருக்கு குறையாமல் மருத்துவ உதவி அளித்து வருகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பலா் பல்வேறு உடல்நலக்குறைவுகளால் இங்கு வருகின்றனா். அவா்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை கொடுத்து வருகிறோம்.
Advertisement
பெரும்பாலும் இரத்தக் கொதிப்பு, கை, கால் வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்காக இங்கு வருகின்றனா். எங்களுடன் துணை மருத்துவா்கள் உள்பட 15 போ் கொண்ட குழுவும் வந்துள்ளது என்றாா் சுக்விந்தா் சிங்.
விவசாயிகளில் வயதான முதியவா்கள் பலா் தங்களிடம் இருக்கும் மருந்து மாத்திரைகள் தீா்ந்துவிட்டால் இங்கு வந்து இலவசமாகப் பெற்றுக்கொள்கிறாா்கள். மத ரீதியாகவும், சமூக சேவையிலும் ஆா்வம் உள்ள உள்ளூா் மக்கள் சிலரும் எங்களுக்கு மருந்துப் பொருள்கள் கொடுத்து உதவி வருகிறாா்கள் என்கின்றனா் டாக்டா் சகோதரா்கள்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மற்றும் இதர பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த பத்து நாள்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.