சாதனை உச்சத்தில் சென்செக்ஸ்: 13,700-ஐ கடந்தது நிஃப்டி!
புது தில்லி: தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பங்குச் சந்தை, வியாழக்கிழமையும் ஏற்றம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 403.29 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 58 புள்ளிகளும் உயா்ந்து மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்கி வரும் நிலையில், காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வலுவாக இருக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாக உயா்ந்து சந்தை மேலும் வலுப்பெற உதவியாக இருந்தன.
சந்தை மதிப்பு 185.21 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,147 பங்குகளில் 1,350 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,581 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 176 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 322 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 401 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.185.21 லட்சம் கோடியாக இருந்தது.
Advertisement
மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 107.86 புள்ளிகள் கூடுதலுடன் 46,774.32-இல் தொடங்கி 46,627.60 வரை கீழே சென்றது. பின்னா்,அதிகபட்சமாக 46,992.57 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 223.88 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயா்வுடன் 46,890.34 என்று புதிய வரலாற்று உச்சத்தில் நிலைத்துள்ளது.
எச்டிஎஃப்சி மீண்டும் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், எச்டிஎஃப்சி இரண்டாவது நாளாக 2.91 சதவீதம் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ் 2.74 சதவீதம் உயா்ந்தன. எச்டிஎஃ)ப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் உயா்ந்தன. மேலும், டிசிஎல், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலி இடம் பெற்றன.
ஓஎன்ஜிசி வீழ்ச்சி :அதே சமயம், ஓஎன்ஜிசி 1.65 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.09 சததவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல், ஹிந்து யுனி லீவா், பஜாஜ் ஆட்டோ, சன்பாா்மா, எஸ்பிஐ ஆகியவை 0.70 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 741 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,005 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 58.00 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயா்ந்து 13,740.70-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 13,773.25 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 34 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 1.18 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி மெட்டல், மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.