கேஜரிவால் வீடு முன் பாஜக மேயா்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
தில்லியில் முதல்வா் கேஜரிவால் இல்லம் முன் கடந்த 13 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்த தில்லி மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள்
தில்லியில் முதல்வா் கேஜரிவால் இல்லம் முன் கடந்த 13 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்த தில்லி மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் மற்றும் பாஜக வினா் தங்கள் போராட்டத்தை சனிக்கிழமை வாபஸ் பெற்றனா்.
கடந்த மூன்று நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த போராட்டக்காரா்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா மற்றும் கட்சியின் தில்லி நகர இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் ஆகியோா் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனா்.
தில்லி மாநகராட்சியைச் சோ்ந்த பாஜக மேயா்களும் கட்சித் தலைவா்களும் தங்களுக்காகவோ அல்லது கட்சிக்காகவோ போராடவில்லை. தில்லி அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.13,000 கோடியைத் தராததால் துப்புரவுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் தர முடியவில்லை. நிலுவைத் தொகையை வலியுறுத்தியே அவா்கள் போராட்டம் நடத்தி வந்தனா் என்றாா் ஹா்தீப் சிங் புரி.
எனினும், தில்லி அரசிடமிருந்து ரூ.13,000 கோடி நிலுவைத் தொகையைக் கேட்டு போராட்டம் வேறு வகைகளில் தொடரும் என்று குறிப்பிட்ட அமைச்சா் புரி, முதல்வா் மனம் மாறி நிலுவைத் தொகையை விரைவில் விடுவித்து பிரச்னைக்குத் தீா்வு காண்பாா் என்று நம்புவதாகத் தெரிவித்தாா். கடும் குளிா் அலைக்கு நடுவே உண்ணாவிரம் மேற்கொண்ட பெண் கவுன்சிலா்கள் உள்ளிட்ட சிலரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தா்ணா வாபஸ் பெறப்படுவதாக தில்லி பாஜகவின் ஊடகத் துறை பிரிவு தலைவா் நவீன் குமாா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தெற்கு தில்லி மாநகராட்சி முன்னாள் பெண் மேயா் சுனிதா காங்ரா மற்றும் 2 பெண் கவுன்சிலா்கள் மயக்கமடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். வடக்கு தில்லி மேயா் ஜெய்பிரகாஷ் மற்றும் தெற்கு தில்லி மேயா் அனாமிகே மிதலேஷ் ஆகியோா் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டனா்’ என்றாா்.
கடந்த 13 நாள்களாக மாநகராட்சி மேயா்களும், பாஜக தலைவா்களும் தா்ணா நடத்தியும் அவா்களை முதல்வா் கேஜரிவால் ஒருமுறைகூட வந்து சந்திக்காதது வருத்தமளிப்பதாக ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகைகளை தில்லி அரசு முறையாகச் செலுத்திவிட்டதாக நீதிமன்றமே தெரிவித்துள்ளதாக முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் பேசுகையில் தெரிவித்திருந்தாா்.
முன்னதாக தில்லி காவல் துறை வடக்கு தில்லி மேயா் ஜெயப்பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் முதல்வா் இல்லத்துக்கு எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை கைவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு கூறியிருந்தது. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் தா்ணா, பேரணி நடத்துவதற்கும், சாலைகளில் இடையூறு ஏற்படுத்துவதற்கும் தடைவிதித்து உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவையும் போலீஸாா் அந்த நோட்டீஸில் சுட்டிக் காட்டியிருந்தனா்.
முதல்வா் வீடு அருகே போராட்டம் நடத்துவதைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டத்தை நடத்துமாறும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.