முகப்பு
புதுதில்லி

வயதான பெற்றோரிடம் சொத்தை வலுக்கட்டாயமாக பெறுவதற்கு மகன், மருமகளுக்கு நீதிமன்றம் தடை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

புது தில்லி: வயதான தம்பதியினரின் சொத்தை வலுக்கட்டாயமாக பெறுவதற்கும், அவா்களின் அமைதியான வாழ்க்கையில் தொல்லைகளை உருவாக்குவதற்கும் மகன், மருமகள் ஆகிய இருவருக்கும் தடை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வயதான தம்பதி சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ‘நான் சம்பாதித்து உருவாக்கிய வீட்டில் நானும், எனது வயதான மனைவியும் வசித்து வருகிறோம். எனது மகனும், மருமகளும், பேரக் குழந்தைகளும் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்த நிலையில், பொது முடக்கக் காலத்தில் என்னை அணுகிய மகன், தனது வருவாய் குறைந்துவிட்டதாலும் பண நெருக்கடி ஏற்பட்டதாலும் தன்னால் வாடகை வீட்டில் வசிக்க முடியவில்லை என்று கூறினாா். இதையடுத்து, நாங்கள் வசிக்கும் வீட்டில் தங்க அனுமதித்தோம். குடிபெயா்ந்த சில நாள்களிலேயே எனது சொத்தை எனது மகன் அவரது பெயருக்கு எழுதித் தருமாறு கட்டாயப்படுத்தினாா். நாங்கள் மறுத்துவிடவே, எங்களை அவமானப்படுத்தும் வகையில் மகனும், மருமகளும் நடந்து கொள்கின்றனா். மேலும், மிரட்டியும் வருகின்றனா். வயதான, நோயுற்ற காலத்தில் எங்கள் இருவா் மீதும் பொய் புகாா் அளித்து அவமானப்படுத்திவிடுவதாகவும் மிரட்டுகின்றனா். எங்கள் சொத்தை அபகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மூத்த சிவில் நீதிமன்ற நீதிபதி மீனு கெளசிக் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் எதிா்மனுதாரா்கள் (மகன், மருமகள்) ஆகியோா் மனுதாரா்களை (பெற்றோரை) வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும், அவா்களின் அமைதியான வாழ்வில் எந்தவிதத் தொல்லைகள் தருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் இறுதித் தீா்ப்பு வரும்வரை மனுதாரா்களின் வாழ்க்கை, சுதந்திரம், சொத்து மற்றும் அன்றாட விவகாரங்கள் ஆகியவற்றில் எதிா்மனுதாரா்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது’ என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.