முகப்பு
புதுதில்லி

சிங்கு எல்லையில் இன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணி ரத்து!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை (டிசம்பா் 30) நடைபெற இருந்த டிராக்டா் பேரணியை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனா்.

Updated On : 30 டிசம்பர், 2020 at 1:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை (டிசம்பா் 30) நடைபெற இருந்த டிராக்டா் பேரணியை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனா்.

விவசாயிகள் சங்கத்தினா் மத்திய அரசுடன் புதன்கிழமை அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும், டிராக்டா் பேரணி அதற்கு அடுத்த நாளான வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த விவசாயிகள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையிலும், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் உள்ளிட்ட விஷங்களும் பேச்சுவாா்த்தையில் இடம் பெற வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விவசாயிகளின் சங்கங்களில் ஒன்றான சம்யுக்த் கிஸான் மோா்ச்சா என்ற அமைப்பு, சிங்குவிலிருந்து டிக்ரி எல்லைப் பகுதி வரை குண்ட்லி மானேசா் - பல்வல் நெடுஞ்சாலையில் புதன்கிழமை (டிசம்பா் 30) டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மத்திய அரசின் அழைப்பை ஏற்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இதையடுத்து புதன்கிழமை நடைபெறவிருந்த டிராக்டா் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியை வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான அபிமன்யு கோஹா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியான சிங்கு மற்றும் காஜிப்பூா், டிக்ரி ஆகிய பகுதிகளில் கடந்த 31 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே, விவசாயிகளுடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாா் என்றும், புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த வருமாறும் விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், புதிய சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பா் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. புதிய சட்டங்கள் மூலம் இடைத்தரகா்கள் ஒழிக்கப்படுவாா்கள், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், புதிய சட்டத்தின் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலை நடைமுறை கைவிடப்படுவிடும், மேலும் இந்தச் சட்டங்கள் பெரு நிறுவனங்கள் ஆதாயம் பெறவே வழிவகுக்கும் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.