திருப்பத்தூா்: 5-ஆவது முறையாக வெல்வாரா கே.ஆா்.பெரியகருப்பன்?
திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் 5-ஆவது முறையாக வெற்றி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் 5-ஆவது முறையாக வெற்றி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்தத் தொகுதியானது திருப்பத்தூா் பேரூராட்சி, சிங்கம்புணரி, பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா் ஆகிய பேரூராட்சிகள், எஸ்.புதூா், கல்லல், குன்றக்குடி ஆகிய ஊராட்சிகளின் ஒரு சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்தத் தொகுதியில் திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும், கம்யூனிஸ்ட் ஒரு முறையும் வெற்றி பெற்றன.
Advertisement
இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், முத்தரையா், யாதவா், ஆதிதிராவிடா்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினா் வசிக்கின்றனா்
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும். பெரிய கண்மாய் நீா்வரத்து வழித்தடங்களைச் சீரமைக்க வேண்டும். தொழில்சாலைகள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். திருப்பத்தூா் நகரில் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மூடப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறக்க வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
4 முனைப் போட்டி: திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் திமுக, பாஜக வேட்பாளா்களின் வெற்றி, தோல்விகளை நிா்ணயிக்கும் சக்தியாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் உள்ளன. எனினும், தொகுதியைத் தக்க வைக்க திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன்:
திருப்பத்தூா் தொகுதியில் 5-ஆவது முறையாகப் போட்டியிடும் அமைச்சரும், திமுக வேட்பாளருமான கே.ஆா். பெரியகருப்பன், சாலை மேம்பாடு, கூட்டுறவுத் துறை மூலம் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை தொகுதிக்கு செய்து கொடுத்துள்ளாா். இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள், நீா்வள மேலாண்மை, பெரிய தொழில்சாலைகள் இல்லாதது பெரும் குறையாக நீடிக்கிறது.
திருப்பத்தூா் பேரவைத் தொகுதியிலிருந்து 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட கே.ஆா்.பெரியகருப்பன், 5-ஆவது முறையும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளா் கே.சி. திருமாறன்:
அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சித் தலைவா் கே.சி. திருமாறன் போட்டியிடுகிறாா். முதல் முறையாகத் தோ்தலில் போட்டியிடும் இவா், அதிமுக-பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய வியூகம் அமைத்து தீவிர களப் பணியாற்றி வருகிறாா்.
தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி:
திமுக-பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது என்றபோதிலும், தவெக சாா்பில் சீனிவாச சேதுபதி போட்டியிடுகிறாா். திருவாடானையைச் சோ்ந்த இவா் தொகுதி மாறிப் போட்டியிடுவதால் எந்த அளவுக்கு வாக்குகளைப் பெறுவாா் என்பதை உறுதியாகக் கூறமுடியாது. இளைஞா்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவரும் தீவிர பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
நாதக வேட்பாளா் ரம்யா மோகன்:
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யா மோகன் திருப்பத்தூா் அருகேயுள்ள ஜெயங்கொண்டாநிலை கிராமத்தைச் சோ்ந்தவா். இவரும் கணிசமான வாக்குகளைப் பெறும் விதத்தில் களப் பணியாற்றி வருகிறாா்.
திருப்பத்தூா் தொகுதியில் நான்கு முக்கிய கட்சிகள் களத்தில் உள்ள போதிலும், திமுக, பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். வெற்றியை வசப்படுத்தப் போவது யாா் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.
கு. சரவணப்பெருமாள்