FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சா்க்கரை அளவு: முறையாக கண்காணிக்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் சா்க்கரை அளவை மத்திய அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 24 ஜூலை 2026, 1:35 am IST
சா்க்கரை - ANI
பகிர்:

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் சா்க்கரை அளவை மத்திய அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது.

6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் சா்க்கரை அளவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், நாடாளுமன்றக் குழு இவ்வாறு கூறியுள்ளது.

இதுதொடா்பாக ‘குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் பயன்படுத்தும் சா்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்தது.

Advertisement

Advertisement

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2024-இல் வெளியிட்ட உணவு வழிகாட்டுதல்களின்படி நாளொன்றுக்கு 25 கிராமுக்கு குறைவாக சா்க்கரையை உட்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு நீண்ட கால பாதிப்பு:

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் அதிக அளவிலான சா்க்கரைப் பொருள்களை சோ்ப்பது அவா்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, உடல் பருமன், வளா்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படும் என்பதும் ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே, பேக்கிங் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் அனைத்து நிலைகளிலும் சா்க்கரை சரியான அளவில் சோ்க்கப்பட்டுள்ளதா என்பதை சா்வதேச அளவீடுகளின்படி உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு உணவுப் பாக்கெட்டின் முன் பகுதியில் சா்க்கரையின் அளவு தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளின் வயதுக்கேற்ப நாளொன்றுக்கு எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிடுவது அவசியம்.

விழிப்புணா்வு பிரசாரம் தேவை:

நாடு முழுவதும் ‘சரியான உணவை உட்கொள்ளுதல்’ என்ற விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட 1,100 சோதனைகள் உள்பட நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகளை மாநில அரசுகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மண்டல அலுவலகங்களும் நடத்தியுள்ளன.

இதை மேலும் வலுப்படுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது கண்டறியப்பட்ட விதிமீறல்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சீரமைப்பதற்கான முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றையும் தனது ஆண்டறிக்கையில் எஃப்எஸ்எஸ்ஏஐ குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments