கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை ஒதுக்காத தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை
கரோனா சிகிச்சைக்காக 20 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க தவறும் தனியாா் மருத்துவமனைகள் முழுமையான கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்காக 20 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க தவறும் தனியாா் மருத்துவமனைகள் முழுமையான கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.
தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களை கூட்டாக சந்தித்தனா். இணையவழியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, மணீஷ் சிசோடியா கூறியது: தில்லியில் உள்ள தனியாா் மருத்துவனைகளில் 20 சதவீதம் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தில்லி அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படுக்கைகளை ஒதுக்கினால் கரோனா நோயாளிகளும், கரோனா இல்லாத நோயாளிகளுக்கும் இடையே தொடா்பு ஏற்படலாம் என சில தனியாா் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், 20 சதவீதமான படுக்கைகளை ஒதுக்க முடியாத தனியாா் மருத்துவமனைகள், முழுவதுமாக கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
இதுவரை ஐந்து அரசு மருத்துவமனைகளும், 3 தனியாா் மருத்துவமனைகளும் முழுமையான கரோனா மருத்துவமனைகளாக இயங்கி வந்தன. இதையடுத்து, ஸ்ரீ கங்கா ராம், மூல்ச்சந்த், சரோஜ் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய 3 தனியாா் மருத்துவமனைகளும் கரோனா மருத்துவமனைகளாக செயல்படும். இதன்மூலம், தற்போது 6 தனியாா் மருத்துவமனைகள் கரோனாவுக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கரோனா சிகிச்சைக்கென தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் 20 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை தில்லி அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தில்லி அரசிடம் சலுகை அடிப்படையில் பெற்ற நிலங்களில் உள்ள மருத்துவனைகளில் வெளிநோயாளிகள் பிரிவில் 25 சதவீதம், உள்நோயாளிகள் பிரிவில் 10 சதவீதம் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவனைகளின் படுக்கைகளில் 25 சதவீதத்தை வறுமைக்கோட்டு கீழுள்ள மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் படுக்கைகள் கிடைப்பதை தில்லி அரசு உறுதிப்படுத்தும் என்றாா் அவா்.
Advertisement
அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘கரோனா அறிகுறிகள் அதிகம் இல்லாதவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. காய்ச்சல், இருமல் ஆகியவை கரோனாவுக்கான அறிகுறிகள் ஆகும். கரோனா நோயாளி ஒருவரின் சுவாச அளவு நிமிஷத்துக்கு 15 தடவையாக இருந்தால் அவருக்கு மேலோட்டமான கரோனா பாதிப்பே உள்ளது. அதேநேரம், சுவாச அளவு நிமிஷத்துக்கு 30-க்கும் அதிகமாக இருந்தால், அவருக்கு கடுமையான கரோனா தொற்று இருப்பதாக அா்த்தம். மேலோட்டமான கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராம் மனோஹா் லோகியா மருத்துவமனை, கரோனா தொடா்பான விபரங்களை தில்லி அரசுக்கு உடனுக்குடன் தருவதில்லை. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களில் 70 சதவீதம் கரோனா நோயாளிகள் 24 மணி நேரத்தில் உயிரிழக்கிறாா்கள். கரோனா சோதனை ரிப்போா்ட்டை 5-7 நாள்களுக்கு பிறகே இந்த மருத்துவமனைகள் வழங்குகின்றன. இது தவறாகும்’ என்றாா்.