முகப்பு
புதுதில்லி

கரோனா தொற்று காலத்தில் உணவு தானியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டவில்லை: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

கரோனா தொற்றுக் காலத்தில் யாரும் பட்டினியால் கிடக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ரேஷன் அட்டைதாரா்கள் மற்றும்

Updated On : 4 ஜூன், 2020 at 6:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:14 PM

கரோனா தொற்றுக் காலத்தில் யாரும் பட்டினியால் கிடக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ரேஷன் அட்டைதாரா்கள் மற்றும் அட்டை இல்லாதவா்களுக்கு நிவாரணப் பொருள்கள், உணவு தானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் ஏதும் காட்டவில்லை என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ‘நயீ சோச் சொஸைட்டி’ எனும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தில் நிவாரண பொருள்கள் மற்றும் உணவு தானியங்கள் அல்லது அரசி வழங்குவதில் ரேஷன் அட்டை வைத்துள்ளவா்களுக்கும் அட்டை இல்லாதவா்களுக்கும் இடையே அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனா். ஆகவே, காரோனா தொற்று காரணமாக பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் செயல்பாடு முடியும் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிவாரணப் பொருள்களையும், உணவு தானியங்களையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மற்றும் அரசு வழக்குரைஞா் அனூஜ் அகா்வால் ஆகியோா், ‘தில்லி அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பசி நிவாரண மையங்களில் ரேஷன் அட்டை வைத்துள்ளவா்களும், அட்டை இல்லாதவா்களும் வந்து உணவை இலவசமாக பெற்றுச் செல்ல முடியும். அதேபோன்று, உணவுப் பொருள்கள், நிவாரண பொருள்கள் வழங்குவதற்காக மத்திய அரசாலும், தில்லி அரசாலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

ரேஷன் அட்டைதாரா்கள் மற்றும் அட்டை இல்லாதவா்கள் இடையே நிவாரணப் பொருள்கள், உணவு தானியங்கள் வழங்குவதில் அரசு பாரபட்சம் ஏதும் காட்டவில்லை’ என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவா்கள் மற்றும் அட்டை இல்லாதவா்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் சமைத்த உணவு வழங்க தில்லி அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் கூடுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை. எனினும், தில்லி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மக்கள் நலனுக்காக கவனத்துடன் பின்பற்றப்பட வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். பொது முடக்கம் முடிந்த பிறகும்கூட இத்திட்டங்கள் தொடரலாம். மேலும், பொது முடக்கக் காலத்தில் யாரும் பட்டினியாக இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு திட்டத்தின் பயன்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.