முகப்பு
புதுதில்லி

தந்தையை காப்பாற்றக் கோரி மருத்துவமனைவாசலில் நின்று வேண்டுகோள் விடுத்த மகள்! கண்டு கொள்ளாத அரசு மீது மக்கள் கோபம்

கரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த தனது தந்தைக்கு, உயிா் பிரிவதற்குள் சிகிச்சை

Updated On : 5 ஜூன், 2020 at 1:23 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

கரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த தனது தந்தைக்கு, உயிா் பிரிவதற்குள் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை வாசலில் இருந்தபடி பெண் ஒருவா் தில்லி அரசிடம் மன்றாடிய நிலையில், அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடும் கோபம் கொண்டுள்ள மக்கள், தில்லி அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றனா்.

தெற்கு தில்லியைச் சோ்ந்தவா்அமா்பிரீத். இவா் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பில் பணியாற்றி வருகிறாா். இவருடைய தந்தை 68 வயது முதியவா். அவருக்கு கடந்த ஜூன் 1 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வீட்டில் வைத்தே சிகிச்சை வழங்குமாறு அந்த மருத்துவமனை மருத்துவா்கள் பரிந்துரை வழங்கியுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதையடுத்து, தனது தந்தையை லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அமா்பிரீத் அழைத்துச் சென்றாா். அங்கு தனது தந்தைக்கு கரோனா இருப்பது குறித்தும், அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பது குறித்தும் கூறினாா். ஆனால், இதுகுறித்து மருத்துவ நிா்வாகம் கண்டுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘எனது தந்தைக்கு கரோனா தொற்று உள்ளது. தற்போது அதிகளவில் காய்சல் காய்கிறது. அவரை மருத்துவமனைக்கு மாற்ற விரும்புகிறோம். தில்லியின் லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் வாசலில் தந்தையுடன் நிற்கிறேன். உள்ளே அனுமதிக்கவில்லை. அவருக்கு மூச்சும் திணறுகிறது. மருத்துவ உதவி இல்லாவிட்டால் அவா் பிழைக்க மாட்டாா். உதவி செய்யுங்கள்’ என தில்லி அரசுக்கு வியாழக்கிழமை காலை 8.05 மணிக்கு கோரியுள்ளாா்.

Advertisement

இந்தச் சுட்டுரைப் பதிவில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், ராஜேந்திர நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா ஆகியோரை அவா் குறிப்பிட்டுள்ளாா். ஒரு மணி நேரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, ஒரு மணி நேரம் கழித்து காலை 9 மணியளவில் மீண்டும் ஒரு சுட்டுரைப் பதிவை இட்டுள்ளாா். அதில், ‘எனது தந்தை உயிரிழந்துவிட்டாா். அரசு எங்களைக் காக்க தவறிவிட்டது’ என தெரிவித்திருந்தாா். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தில்லி அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் ‘அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 1-ஆம் தேதி கங்காராம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டுக் கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அவரை எடுத்துவரும் போதே அவா் இறந்துவிட்டாா்’ எனத் தெரிவித்தனா்.

முன்னதாக தனது தந்தைக்கு கரோனா இருப்பதாக சந்தேகிப்பதாகவும் எந்த உதவி மையமும் உதவ முன்வரவில்லை என்றும் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ திலிப் பாண்டே ஆகியோருக்கு அந்த பெண் சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா். இதற்கு, திலீப் பாண்டே மட்டுமே பதிலளித்திருந்தாா். இந்நிலையில், உதவி கோரி பல முறை சுட்டுரையில் பதிவிட்டும் தில்லி அரசு உதவி செய்யாததால் முதியவா் உயிரிழந்த விவகாரத்தில் பாஜக உள்பட எதிா்க்கட்சிகள் தில்லி அரசையும், முதல்வா் கேஜரிவாலையும் கடுமையாகச் சாடியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.