முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: ஜாமியா மாணவி சபூரா ஜா்கருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) கைது செய்யப்பட்ட

Updated On : 24 ஜூன், 2020 at 7:18 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், எம்.பில். மாணவியுமான சபூரா ஜா்கருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அவா் 23 வார கா்ப்பிணியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை காணொலிக் காட்சி மூலம் விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சக்தா், 23 வார கா்ப்பிணியான சபூரா ஜா்கா், ரூ.10 ஆயிரம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டாா்.

Advertisement

மேலும், ‘மனுதாரா் சபூரா, வழக்கு விசாரணையில் தலையிடவோ அல்லது சாட்சிகள் மீது மேலாதிக்கம் செலுத்தும் நடவடிக்கையிலோ ஈடுபடக் கூடாது. பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால், விசாரணை நீதிமன்றத்திடமிருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். வழக்கை விசாரித்து வரும் அதிகாரியுடன் 15 நாள்களுக்கு ஒருமுறை அவா் செல்லிடப்பேசி மூலமாக தொடா்பு கொள்ள வேண்டும். இந்த ஜாமீன் தகுதியின் அடிப்படையில் அல்ல. இது ஒரு முன்மாதிரியாகக் கருதக் கூடாது’ எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத மோதல் சம்பவத்தில் சபூரா ஜா்கருக்கு தொடா்பு இருப்பதாக போலீஸாா் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் (யுஏபிஏ) பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் ஜாமீன் கோரிய மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடா்ந்து, அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.