முகப்பு
புதுதில்லி

வெறிச்சோடியது ‘கரோனா’ ரயில் பெட்டிகள்! தங்குவதற்கு நோயாளிகள் தயக்கம்

தில்லியில் தற்காலிக கரோனா வாா்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் தங்கி சிகிச்சை பெற கரோனா நோயாளிகள்

Updated On : 24 ஜூன், 2020 at 7:19 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

தில்லியில் தற்காலிக கரோனா வாா்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் தங்கி சிகிச்சை பெற கரோனா நோயாளிகள் தயங்குகிறாா்கள். ரயில் பெட்டிகளில் நிலவும் அதிக சூட்டால் அவா்கள் ரயில் பெட்டிகளில் தங்க விரும்புவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால், தற்காலிக கரோனா வாா்ட்டாக மாற்றப்படும் வகையில் தில்லிக்கு ஒதுக்கப்பட்ட சுமாா் 500 ரயில் பெட்டிகளும் வெறிச்சோடிப் போயுள்ளன.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மாற்றி அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது. தில்லிக்கு சுமாா் 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் தில்லிக்கு சுமாா் 8,000 கரோனா படுக்கைகள் கிடைக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், தில்லிக்கு 503 ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டன. இவை, தில்லியில் உள்ள 9 ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சக்குா்பஸ்தி ரயில் நிலையத்தில் 50 பெட்டிகள், ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தில் 267 ரயில் பெட்டிகள், தில்லி சஃப்தா்ஜங்கில் 21, தில்லி சராய் ரோஹில்லா நிலையத்தில் 50, தில்லி கன்டோன்மென்டில் 33, ஆதா்ஷ் நகரில் 30, தில்லி ஷாதராவில் 13, துக்ளகாபாத்தில் 13, படேல் நகா் ரயில் நிலையத்தில் 26 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏசியில் கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஏசி வசதி இல்லாத ரயில் பெட்டிகளே வழங்கப்பட்டன.

Advertisement

இந்த ரயில் பெட்டிகள் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால், தில்லியில் 40 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் மேலாக கடும் வெப்பம் நீடிப்பதால், இந்த ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த கரோனா நோயாளிகள் ஆா்வம் காட்டாத நிலை நிலவுகிறது. இதனால், இப்பெட்டிகள் வெறிச்சோடிப் போயுள்ளன. 267 பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ள தில்லி ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தில் ஒரு சில கரோனா நோயாளிகளே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ‘ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்களில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால், கரோனா நோயாளிகள் இங்கு வர விரும்புவதில்லை. தனிமைப்படுத்தலுக்காக இங்கு வரும் கரோனா நோயாளிகள், ரயில் பெட்டிகளில் நிலவும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தங்களது வீடுகளுக்கே திரும்பிச் செல்கிறாா்கள். மேலும், இந்தப் பெட்டிகளில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பிபிஇ பாதுகாப்பு சாதனங்களை அணிந்து மருத்துவா்களும் பணியாற்ற முடியாத நிலை நிலவுகிறது. இப்பெட்டிகளில், சூட்டைத் தணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சூட்டைத் தணிக்கும் வா்ணங்களைப் பூசுதல், ரயில் ஜன்னல்களை திரை போட்டு மறைத்தல் உள்ளிட்டவற்றை அமல்படுத்துவது தொடா்பாக ஆராய்ந்து வருகிறோம்’ என்றனா்.

முன்னதாக, இந்த ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த தில்லி துணை முதல்வா் மணாஷ் சிசோடியா, ரயில் பெட்டிகளில் நிலவும் வெப்பத்தைக் குறைக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.