மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு: வழக்கு விசாரணை ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலங்கள் ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மாநிலங்கள் ஒப்படைக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இடங்களை நடப்புக் கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடா்பாக தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினா் சங்கத்தின் செக்ரட்டரி ஜெனரல் கீதா, தில்லி உயா்நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்காக மாநிலஅரசுகள் ஒப்படைத்த இடங்கள் ஓபிசி பிரிவு மாணவா்களுக்கு 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், இந்தப் பிரிவினருக்கு இந்த இரு ஆண்டுகளில் மட்டும் 5,530 இடங்கள் சென்றிருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் ஆகியோருக்கு உரிய இடஒதுக்கீடு இடங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஓபிசி பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இது அரசமைப்புச் சட்டம் 14-ஆவது பிரிவை மீறுவதாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட சுகாதார, குடும்ப நலத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், பதில் இல்லை. ஆகவே, இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகளால் ஒப்படைக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்த் நாத் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகேஷ் நாராயணன், ‘இது தொடா்புடைய விவகாரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
இது தொடா்பாக மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரை ஏ.ராஜராஜன் கூறுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் நிா்வாக உத்தரவின் பேரில் அந்தப் பிரிவினருக்கு இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. ஆனால், ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற சட்ட வாய்ப்பிருந்தும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி, மாநில அரசுகள் ஒப்படைக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்களில் அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு இருப்பது பாகுபாடாகும் என்று நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக ஜூலை 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா்’ என்றாா்.