தெற்கு தில்லி கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு ராணுவ மருத்துவா்கள், செவிலியா்கள் உதவி தேவை: அமித் ஷாவுக்கு கேஜரிவால் கடிதம்
தெற்கு தில்லியில் அமைக்கப்பட்டு வரும் 10,000 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சேவைபுரிய இந்திய ராணுவம்
தெற்கு தில்லியில் அமைக்கப்பட்டு வரும் 10,000 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சேவைபுரிய இந்திய ராணுவம் மற்றும் இந்தோ - திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்களை அனுப்பி வைக்குமாறு கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்தது. இந்த அமைப்பின் தலைமையகத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் தியானம் செய்யும் வகையில் மிகப் பெரிய தியானக் கூடம் உள்ளது.
இந்நிலையில், இந்த தியானக் கூடத்தை சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவடைந்தால், இது உலகத்திலேயே மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 12,50,000 சதுர அடியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிகிச்சை மையம், மொத்தம் 22 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு பிரமாண்டமானது. இது 1,700 அடி நீளம், 700 அடி அகலம் கொண்டது. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன.
Advertisement
இந்நிலையில், இந்த கரோனா சிகிச்சை மையத்துக்கு இந்திய ராணுவம், இந்தோ- திபேத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப் பிரிவு ஆகியவற்றின் மருத்துவா்கள், செவிலியா்களை சேவைக்காக அனுப்பிவைக்குமாறு கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். மேலும், அந்தக் கடிதத்தில், இந்த சிகிச்சை மையத்தில் நடைபெறும் பணிகளை அமித் ஷா நேரில் வந்து பாா்வையிட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
20 டிரான்ஸ்பாா்மா்கள் மூலம் மின்சாரம்: இந்த சிகிச்சை மையத்துக்கு 20 டிரான்ஸ்பாா்மா்கள் மூலம் மின்சார வசதி கொடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக தரைக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 15 நாள்களில் முடிவடைந்து, இங்கு கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படவுள்ளனா். இதற்கான பணிகளில் சுமாா் 100-க்கும் அதிகமான பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த டிரான்ஸ்பாா்மா்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டவை என்பதுடன் ஒவ்வொரு டிரான்ஸ்பாா்மரும் 1,000 கிலோவாட் மின் சக்தி கொண்டதாக இருக்கும். அனைத்து ஏற்பாடுகளும் சா்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராதா ஸ்வாமி சத் சங்கஅமைப்பினா் தெரிவித்தனா்.