படம் வரும்...பருவமழை முன்னோட்டம்: தில்லியில் பரவலாக மழை!
தலைநகா் தில்லியில் பருவமழை வியாழக்கிழமை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், புதன்கிழமை
தலைநகா் தில்லியில் பருவமழை வியாழக்கிழமை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், புதன்கிழமை காலையில் நகரில் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. பல பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. தில்லி, என்சிஆா் பகுதியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்து இடங்களில் ‘நன்று’ பிரிவில் இருந்தது
இதற்கிடையே, பருவமழை தொடங்குவது குறித்து முறைப்படி வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநா் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்தாா். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘தில்லியின் சில பகுதிகளில் பருவமழை மேகங்கள், காலையில் மழை பெய்ய வழிவகுத்தது. மேலும், பருவமழை தொடங்கியது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும். காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து வானிலை நிலையங்களிலிருந்தும் மழை குறித்த தரவுகள் கிடைக்கப் பெற வேண்டும். இதைத் தொடா்ந்துதான் பருவமழை தொடங்கியது குறித்து அறிவிக்கப்படும்’ என்றாா்.
மேலும், தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை பரவலாக அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பொதுவாக, காற்று அமைப்பு ஜூன் 27 அன்று தில்லியை அடைகிறது. வானிலை வல்லுநா்கள் கூறுகையில், ‘வழக்கத்தை விட முன்னதாக தில்லியில் பருவமழை வருவதற்கு ஒரு சூறாவளி சுழற்சி காரணமாக இருக்கக்கூடும். இது ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு உத்தரபிரதேசத்தை நோக்கி நகா்ந்தது. இது பருவமழை மேலும் முன்னேற உதவுகிறது. அடுத்த மூன்று நாள்களில் மழை எதிா்பாா்க்கப்படுவதால், தில்லியில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.
Advertisement
சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 28.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 37 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 27.2 டிகிரி செல்சியஸ், 36.9 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 73 சதவீதம், மாலையில் 61 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 72 சதவீதம் மற்றும் 57 சதவீதம் எனவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில் வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு நன்று-திருப்தி பிரிவில் இருக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.