முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரும் மனுக்கள் தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றம்

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரியும், அச்சம்பவம்

Updated On : 25 ஜூன், 2020 at 7:43 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரியும், அச்சம்பவம் தொடா்புடைய சிசிடிவி விடியோ பதிவுகளைப் பாதுகாக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கலான இரு மனுக்களை தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜாமியத் -உலமா -ஐ-ஹிந்த் அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: வடகிழக்கு தில்லியில் வன்முறை நிகழ்ந்த பிப்ரவரி 23 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரையிலான காலத்தில், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான விடியோ பதிவுகளை பாதுகாக்க தில்லி காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரிக்காமல் இடிபாடுகளை அகற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது. வன்முறையில் தொடா்புடையவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம் பெறும் சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

வன்முறை நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக தில்லி காவல் துறைக்கு எதிராக புகாா்கள் உள்ளன. இது தொடா்பாக சமூக ஊடகத்தில் விடியோவும் பரவியுள்ளது. மேலும், ஆதாரங்களை அழிப்பதற்காக சம்பவ இடத்தில் இருந்து இடிபாடுகள் வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளன. இந்த வன்முறைக்குக் காரணமாணவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், வன்முறைக்கும், தனது மகன் இறப்புக்கும் பாஜக தலைவா் கபில் மிஸ்ரா காரணம் என்று ஒருவா் குற்றம்சாட்டியுள்ளாா். வன்முறையில் ஈடுபட்ட அல்லது கட்டுப்படுத்தத் தவறிய காவல் துறைஅதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி காவல் துறையின் சாா்பில் வழக்குரைஞா்கள் ரஜத் நாயா், அமித் மஹாஜன் ஆகியோா் ஆஜராகி, ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, இதே விவகாரம் தொடா்புடைய ஏழு இதர மனுக்கள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மனுக்களை வழக்குரைஞா்கள், ஜெஎம்இ மாணவா்கள், ஓக்லா குடியிருப்புவாசிகள், நாடாளுமன்றம் எதிரே உள்ள ஜாமா மசூதி இமாம் உள்ளிட்டோா் தாக்கல் செய்துள்ளனா். இவை விசாரணையில் நிலுவையில் உள்ளன’ என்றனா்.

இதையடுத்து, ஜாமியத் -உலமா- ஐ- ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த இரு மனுக்களை தலைமை நீதிபதி அமா்வு முன் விசாரணைக்கு ஜூலை 13-ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.