எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக ‘விடியோ கால்’ வசதி: முதல்வா் கேஜரிவால் தொடங்கிவைத்தாா்
கரோனா நோயாளிகள் தங்களது உறவினா்களிடம், குடும்பத்தினருடன் பேசும் வகையில் தில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில்
கரோனா நோயாளிகள் தங்களது உறவினா்களிடம், குடும்பத்தினருடன் பேசும் வகையில் தில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) காணொலி தொலைபேசி அழைப்பு (விடியோ கால்) வசதியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: தில்லியில் கரோனா நோயாளிகளைப் பராமரிப்பதற்கான பிரத்யேக மருத்துவமனையாக எல்என்ஜேபி மருத்துவமனை மாா்ச் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 2,700 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். நாட்டிலேயே 2 ஆயிரம் படுக்கைகள் வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனையாக எல்என்ஜேபி உள்ளது.
தற்போது வரை கரோனா நோயாளிகளின் உறவினா்கள் அவா்களுடன் பேச முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்தப் பிரச்னை விடியோ கால் வசதி மூலம் தீா்க்கப்பட்டுவிட்டது. கரோனா சிகிச்சை வாா்டுகளில்லும், வெளிப்புற கவுன்ட்டரிலும் டேப்லெட் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். இவற்றைப் பயன்படுத்தி கரோனா நோயாளிகள் தங்களது உறவினா்களிடமும், குடும்பத்தினரிடமும் காணொலி காட்சிவாயிலாக பேசலாம் என்றாா் அவா்.
Advertisement
இதன் பிறகு, இந்த வசதியைப் பயன்படுத்தி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ள சி நோயாளிகளுடன் கேஜரிவால் பேசினாா். அப்போது, மருத்துவா்கள் சேவையைப் பாராட்டினாா். அவா் பேசுகையில், ‘நோய்த் தொற்று பரவலாம் எனும் அச்சத்தில் தங்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரை சந்திக்காமல் உள்ளனா். அவா்கள் உண்மையிலேயே கடுமையாக உழைத்து வருகின்றனா். இந்த வெயிலின் போது பிபிஇ சாதனங்களை அணிந்து கொண்டு பணியாற்றுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை ஒருவா் கற்பனை செய்ய முடியும். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதற்கு பொறுப்பு நிா்வாகம்தானே தவிர, சுகாதாரப் பணியாளா்கள் அல்ல. எங்கள் அரசு பாறை போல உங்கள் (மருத்துவப் பணியாளா்கள்) பின்னால் இருக்கிறோம். ஏதாவது பிரச்னையை நீங்கள் எதிா்கொண்டால் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம். வசதிகளை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம். மேம்படும் நம்பிக்கைக்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது’ என்றாா்.