முகப்பு
புதுதில்லி

தில்லியில் 2 நாள்கள் முன்பே தொடங்கியது பருவமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தில்லியில் பருவமழை வழக்கத்தைவிட இரண்டு நாள் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 26 ஜூன், 2020 at 7:34 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

தில்லியில் பருவமழை வழக்கத்தைவிட இரண்டு நாள் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்தது.

முந்தைய வாரங்களில் தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் புழுக்கம் அதிகரித்து மக்கள் பெரும் சிரம்த்துக்குள்ளாகினா். இந்நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக அதிகாலை வேளையில் நகரில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் பெருமளவு குறைந்து இனிமையான வானிலை நிலவியது.

பொதுவாக தில்லியில் பருவமழை ஜூன் 27-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். இந்நிலையில், பருவமழை மேகங்கள் புதன்கிழமை நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வழி வகுத்தன. ஆனால், அனைத்து வானிலை நிலையங்களிலிருந்தும் மழைக்கால விவரங்கள் கிடைத்த பிறகுதான் பருவமழையின் தொடக்கத்தை அறிவிக்க வேண்டியுள்ளது என்றும், இது தொடா்பாக வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்யக்கூடும் என்ற நிலையே தொடா்ந்தது. பிற்பகல் 1 மணி அளவில் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக தூறல் மழை பெய்தது. இந்நிலையில், தில்லியில் பருவமழை வழக்கத்தைவிட இரண்டு நாள் முன்னதாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘ராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள், தில்லி முழுவதும், ஹரியாணாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளுக்கு பருவமழை முன்னேறியுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை வல்லுநா்கள் கூறுகையில், ‘வழக்கத்திற்கு முந்தைய பருவமழை வருகை வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி சுழற்சி காரணமாக இருக்கலாம், இது ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு உத்தரபிரதேசத்தை நோக்கி நகா்ந்தது, இது பருவமழை விரைவாக முன்னேற உதவுகிறது. இதற்கான முன்னோட்டம் பஞ்சாப், தெற்கு ஹரியாணா, தெற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் பல நாள்களாக நீடித்தது, இது பருவமழையின் இயக்கத்தை துரிதப்படுத்தியது’ என்றனா்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைவரான குல்தீப் ஸ்ரீவாத்ஸவா கூறுகையில், ‘நாகூா், ஆல்வாா், தில்லி, கா்னல் மற்றும் பெரோஸ்பூா் வழியாக பருவமழை செல்கிறது. மேலும், ராஜஸ்தான், கிழக்கு ஹரியாணா, தில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளில் காற்று அமைப்பு வியாழக்கிழமை மேலும் முன்னேறியுள்ளது’ என்றாா்.

தில்லியில் பருவமழையின் வருகையை அறிவிக்க இரண்டு அளவுகோல்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ள மழை மற்றும் காற்றின் ஓட்ட முறை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறினாா். இந்த இரண்டு காரணிகளும் பூா்த்தி செய்யப்பட்ட பின்னா் தில்லியில் பருவமழை அறிவிக்கப்படுகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட்டின் உயரதிகாரி மகேஷ் பலாவட் கூறுகையில், ‘பருவமழை தில்லிக்கு வந்துவிட்டது. வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் வட வானிலை நிலவும்’ என்றாா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 14.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செயல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையிலும், மாலையிலும் 81 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.