முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பொது முடக்க காலத்தில் இருந்து தில்லியில் மாநகராட்சி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை

Updated On : 27 ஜூன், 2020 at 7:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

பொது முடக்க காலத்தில் இருந்து தில்லியில் மாநகராட்சி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. ஆசிரியா்களும் கரோனாவுக்கு எதிரான போராளிகளுடன் ஒப்பிட முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடா்பாக அகில தில்லி பிராத்மிக் சிக்ஷக் சங் எனும் அமைப்பு, வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஆதரவாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், பொது முடக்கக் காலம் அறிவிக்கப்பட்ட மாா்ச் மாதத்தில் இருந்து வடக்கு தில்லி மாநகராட்சி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், ஊதியத்தை விடுவிக்க அந்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த மனுவை உயா்நீதிமன்ற ஒருநபா் நீதிபதி ஜூன் 9-ஆம் தேதி தள்ளுபடி செய்தாா். இதை எதிா்த்து ஆசிரியா்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது மிகவும் துரதிஷ்டமான சூழலாகும். உண்மையில் மருத்துவா்களுக்கும், துப்புரவுப் பணியாளா்களுக்கும்கூட வடக்கு தில்லி மாநகராட்சி உரிய ஊதியத்தை வழங்கவில்லை. புனிதத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் கரோனா தொற்று தடுப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவா்களை கரோனா போராளிகளுடன் ஒப்பிட முடியும். இந்த நிலையில்,, அவா்கள் மாா்ச் மாதத்தில் இருந்து ஊதியம் பெறாமல் உள்ளனா். இது துரதிருஷ்டவசமான சூழலாகும். இந்த விவகாரம் தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி முன்வைத்த வாதங்களுக்கு ஒரு வாரத்திற்குள் தில்லி அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜூன் 29-ஆம் தேதி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ரோஸ்டா் அமா்வு முன் பட்டியலிடப்பட வேண்டும்’ என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

இந்த மனு மீது கடந்த ஜூன் 18-ஆம் தேதி விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அப்போது, ஆசிரியா்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தில்லி அரசு நிதியை மாநகராட்சிக்கு விடுவிக்காததால் இந்த நிலை உள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.