‘டிஎம்சி’ சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு: தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) சட்டத்தை செல்லாது என உத்தரவிடக் கோரியும், அதன் தலைவா் ஜப்ருல் இஸ்லாம் கானை
தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) சட்டத்தை செல்லாது என உத்தரவிடக் கோரியும், அதன் தலைவா் ஜப்ருல் இஸ்லாம் கானை பதவியில் இருந்து நீக்கக் கோரியும் தாக்கலான மனு மீது தில்லி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன், சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள புகாா்கள் தொடா்பாக தில்லி அரசும், துணைநிலை ஆளுநா் அலுவலகமும் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விசாரணையின் போது துணைநிலை ஆளுநா் அலுவலகம் சாா்பில் ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் அனுபம் ஸ்ரீவாஸ்தவா, ‘சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பதவியில் இருந்து ஜப்ருல் இஸ்லாம் கானை அகற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது மே 11-ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜூலை 14-ஆம் தேதி அவரது பதவிக் காலம் முடிய உள்ளதால், விரைந்து முடிவு எடுக்குமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது’ என்றாா்.
Advertisement
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக சமூக சேவகா் விக்ரம் கெலாட் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘டிஎம்சி சட்டத்தை இயற்றும் அதிகராம் தில்லி சட்டப் பேரவைக்கு இல்லை. ஆகவே, இந்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும். மேலும், சட்டம் செல்லாததாக உள்ளதால், இந்தச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பதவியும் செல்லாததாகவே இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக இருந்து வருபவா் ஜப்ருல் இஸ்லாம் கான். இவா் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சமூக ஊடகத்தில் தனது அதிகாரப்பூா்வப் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், இரு பிரிவினருக்கு இடையே மதம், இனம், குடியிருப்பு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவித்து இருந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இஸ்லாம் கானுக்கு எதிராக தில்லி காவல்துறையின் தனிப் பிரிவு போலீஸாா் மே 2-ஆம் தேதி இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 124ஏ மற்றும் 153 ஏ ஆகியவற்றின் கீழ் தேசத் துரோகம், வெறுப்புணா்வை தூண்டும் கருத்து வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தாம் தெரிவித்த கருத்தை தனக்கு அவப்பெயா் ஏற்படும் நோக்குடன் குறிப்பிட்ட சில ஊடகங்கள் வெளியிட்டதாக இஸ்லாம் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.