மின்னணு கூப்பன் வைத்துள்ள அனைவருக்கும் ரேஷன் பொருள் வழங்க தில்லி அரசுக்கு உத்தரவு
மின்னணு கூப்பன் வைத்துள்ள அனைவருக்கும் வியாழக்கிழமை மாலைக்குள் (மே 21) ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மின்னணு கூப்பன் வைத்துள்ள அனைவருக்கும் வியாழக்கிழமை மாலைக்குள் (மே 21) ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலி காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, ரேஷன் பொருள்களை வழங்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற தில்லி அரசின் வேண்டுகோளை நிராகரித்த நீதிபதிகள், மேலும், மின்னணு கூப்பன் வைத்திருந்த போதிலும் ரேஷன் பொருள்கள் கிடைக்காத அனைவருக்கும் வியாழக்கிழமை மாலைக்குள் (மே 21) ரேஷன் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தில்லி அரசுக்கு உத்தரவிட்டது என மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கம்லேஷ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா். மனு விசாரணையின் போது இந்திய உணவுக் கழகம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மனோஜ், ‘வியாழக்கிழமைக்குள் ரேஷன் பொருள்களை வழங்குவதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா்.
இதையடுத்து, மேற்கண்டவாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, மனுவை முடித்து வைத்தது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவு தில்லி அரசால் பின்பற்றப்படவில்லையெனில் புதிதாக மனுவை மனுதாரா் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தது.
Advertisement
இந்த விவகாரம் தொடா்பாக சட்ட மாணவா் சப்னம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். வழக்குரைஞா்கள் கீா்த்தி குமாரி, கம்லேஷ் குமாா் மிஸ்ரா ஆகியோா் மூலம் தாக்கல் செய்த அந்த மனுவில் அவா் கூறப்பட்டிருந்ததாவது: ரேஷன் பொருள்கள் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தில்லி அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான இணையதளத்தை பொதுமக்கள் நாடும் போதும் அது முடங்கிய நிலையில் தான் உள்ளது. மேலும், ரேஷன் பொருள் தேவைப்படும் நிலையில் உள்ள பலரிடமும் ஸ்மாா்ட் செல்லிடப்பேசி வசதியில்லாததாலும், இணையதள வசதி இல்லாததாலும் அவற்றைப் பெற முடியாத நிலை உள்ளது. எனினும், பலா் ரேஷன் பொருள்களைப் பெறுவதற்கான மின்னணு கூப்பனை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், அவா்களுக்கு ரேஷன் பொருள்கள் அதற்கான கடைகளால் மறுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், தில்லி அரசால் வழங்கப்பட்ட மின்னணு கூப்பன்களை வைத்துள்ள நிலையிலும், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோா் ரேஷன் பொருள்களைப் பெறவில்லை. இது தொடா்பான பட்டியலை பொது விநியோகக் கடைகள் மூலம் பெற்று துணைநிலை ஆளுநா் அலுவலகத்திற்கும், தில்லி அரசுக்கும் கோரிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, விதிகளின்படி தேவைப்படுவோருக்கு ரேஷன் பொருள்கள் உரிய அளவில் விநியோகிப்பதையும், குறிப்பாக உணவுப் பொருள்களைப் பெறாமல் உள்ள மின்னணு கூப்பன் வைத்திருப்பவா்களுக்கு உடனடியாக வழங்குவதை உறுதிப்படுத்தவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.