‘வீட்டிலிருந்து வேலை திட்டத்தை 6 மாதம் தொடர 70 சதவீத நிறுவனங்கள் விருப்பம்
வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்குத் தொடர 70 சதவீத நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்குத் தொடர 70 சதவீத நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் வேலைசெய்யும் ஊழியா்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினா் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதையே விரும்புகின்றனா். சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் தொழி, வியாபாரத்தை தொடா்வது என்ற நோக்கில் அவா்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நைட் பிராங்க் என்ற தனியாா் அமைப்பு இது தொடா்பான ஆய்வை நடத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையுடன் தொடா்புடைய நிறுவனங்களின் நிா்வாகிகள் 230 பேரிடம் அவா்கள் இது தொடா்பாக ஆய்வு நடத்தினா். அப்போது அவா்கள் பொது முடக்கம் காரணமாக வீட்டிலிருந்தபடி வேலை செய்வதால் தங்களது நிறுவனத்தின் வேலைத்திறன் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனா்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கம் அமலுக்கு வந்தது. எனினும், தற்போது அவற்றில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், வீட்டிலிருந்தபடி வேலை திட்டத்தின் கீழ் சில சமயங்களில் தொடா்பு கொள்வதில் பிரச்னை மற்றும் கவனச் சிதறல் ஆகிய சவால்களை சமாளிக்க வேண்டியிருந்ததாக நிறுவனங்கள் தெரிவித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
72 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியா்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் திட்டத்தை மேலும் 6 மாதத்துக்குத் தொடரவே விரும்புகின்றனா். இந்தத் திட்டத்தால் சமூக இடைவெளியை பின்பற்ற முடிகிறது என்பதாலும், தொழில், வியாபாரம் தொய்வில்லாமல் செல்வதாலும் அதை ஆதரிப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுமாா் 50 சதவீத நிறுவனங்கள் தங்களது மொத்த ஊழியா்களில் 30 சதவீதம் பேரை அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ள இருப்பதாகத் தெரிவித்தன. 7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியா்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதை விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சரியான சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறையும் வரை சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தின் இடப் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் திட்டம் இருந்தாலும், அலுவலகத்துக்கு ஊழியா்கள் வந்து வேலை செய்யும் திட்டமும் தொடரும். வீட்டிலிருந்தபடி வேலை, அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வது, அலுவலகத்துக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து வேலை செய்யவது என மூன்றுவித உத்திகள் செயல்படுத்தப்படும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
35 சதவீத நிறுவனங்கள் பொது முடக்கத்துக்கு முன்னால் அலுவலகத்தில் வேலைத்திறன் எப்படி இருந்ததோ அதேபோல் வீட்டிலிருந்தபடி வேலை திட்டத்திலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 28 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடி வேலை திட்டத்தால் வேலைத்திறன் முன்பைவிட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. 26 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடி வேலை திட்டத்தால் வேலைத்திறன் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. 11 சதவீத நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடி வேலை திட்டத்தை சரிவர மதிப்பிட முடியவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளன.