தில்லி தனியாா் வேலைவாய்ப்பு நிறுவன விதிமுறைகளை அமல்படுத்தும் செயல் திட்டத்திற்கு விரிவான விவாதம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்
வீட்டுப் பணியாளா்களை வழங்கி வரும் தனியாா் வேலைவாய்ப்பு முகமைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தில்லி தனியாா் வேலைவாய்ப்பு முகமைகளின் (ஒழுங்குமுறை) உத்தரவைக் கடுமையாக அமல்படுத்துவதற்கான
புது தில்லி: வீட்டுப் பணியாளா்களை வழங்கி வரும் தனியாா் வேலைவாய்ப்பு முகமைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தில்லி தனியாா் வேலைவாய்ப்பு முகமைகளின் (ஒழுங்குமுறை) உத்தரவைக் கடுமையாக அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகிறது என்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக வழக்குரைஞா்கள், தில்லி அரசு மூத்த அதிகாரிகள், தில்லி பெண்கள்- குழந்தைகள் நலத் துறை ஆணையத்தின் தலைவா் உள்பட 9 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு குழுவை தில்லி உயா்நீதிமன்றம் முன்னா் அமைத்திருந்தது. இந்த நிலையில், இதற்கான பணிகள் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, செவ்வாய்க்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.ஆா். மிதா, பிரிஜேஷ் சேத்தி ஆகியோா் அடங்கிய அமா்விடம் தெரிவித்தது. அப்போது, , ‘இந்த குழுவின் விவாதங்கள் தொடரலாம். அடுத்து விசாரணை நடைபெறும் டிசம்பா் 17-ஆம் தேதிக்கு முன் இது தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் எச்.எஸ். பூல்காவும் குழுவின் செயல்பாட்டில் திருப்தி அடைந்துள்ளாா்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அப்போது, இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக நீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, அஸ்ஸாமை சோ்ந்த ஒருவா் தனது மைனா் மகள் காணாமல் போனதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் ஹேபியஸ் காா்பஸ் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி தில்லி போலீஸாரால் மீட்கப்பட்டாா். இந்த மனுவை விசாரித்து வரும் உயா்நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த செப்டம்பா் 24-இல் நடைபெற்ற விசாரணையின்போது, தில்லி தனியாா் வேலைவாய்ப்பு முகமை (ஒழுங்குமுறை) உத்தரவு உரிய வகையில் செயல்படுத்தப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
Advertisement
இந்த விவகாரம் தொடா்பாக செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவிடம் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இக்குழு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை உத்தரவு சீரிய முறையில் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் என்றும் குழு தெரிவித்திருந்தது.
இந்தக் குழுவில் தில்லி அரசின் வழக்குரைஞா் (குற்றப் பிரிவு) ராகுல் மெஹ்ரா, மூத்த வழக்குரைஞா் எச்.எஸ். பூல்கா, தொழிலாளா் துறை முதன்மைச் செயலாளா் மற்றும் ஆணையா் பிரவீன் குமாா் குப்தா, தில்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால், தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையா் ( சட்டப் பிரிவு) பிரவீா் ரஞ்சன், தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவா் அனுராக் குன்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு செயலா் மது காா்க், தில்லி மாநில தகவல் அலுவலா் (என்.ஐ.சி) இக்பால் ஹசன், பச்பன் பச்சாவோ அந்தோலன் இயக்குநா் (சட்டம்) சம்பூா்ணா பரூவா ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.