ஜன நாயகன் படம் யார் மூலமாக கசிந்திருக்கும்? திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டி!
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி சுப்பிரமணியம் பேட்டி...
ஜன நாயகன் திரைப்படம் இளையதளங்களில் வெளியான விவகாரம் குறித்து பேசும்போது, “எடிட்டிங் டேபிள் அல்லது விஐபிகளுக்கு தனியாக சிறப்புக் காட்சிகள் திரையிடும்பொழுது படம் வெளியாகி இருக்க வாய்ப்பு அதிகம்” என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருந்த ஜன நாயகன் திரைப்படம் இணையதளங்களில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
ஜன நாயகன் திரைப்படம் நேற்று முன்தினம் (ஏப்.9) கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்.10) அதிகாலை 3 மணி அளவில் எச்டி பிரிண்ட் முழுவதும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எடிட்டிங் பணியில் இருக்கும்பொழுது விடியோ வெளியாகி இருக்கலாம் அல்லது விஐபிகளுக்கு தனியாக திரையிட்டு காண்பித்த பொழுது ரெக்கார்ட் செய்யப்பட்டு விடியோ வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்தப் படம் இணையதளங்களில் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரைத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை செலவு செய்துள்ளார். அவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, படம் வெளியாவதற்கு முன்பு ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்தது. தற்பொழுது, இணையதளங்களில் படம் வெளியாகி இருப்பதால் ஓடிடி தளங்களும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2026 பொருத்தவரை ஜன நாயகன் படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என திரையரங்குகள் எதிர்பார்த்த நிலையில் தற்போது இணையதளங்களில் வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளுக்கும் இது மிகப்பெரிய வசூல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய படம் திரையரங்குகளின் கையை விட்டுப் போய்விட்டது. விநியோகிஸ்தர்கள் இந்தப் படத்திற்காக 70 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் இணையதளங்களில் வெளியானதுக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. இணையதளங்களில் வெளியாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் வெளியாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த விலை நிச்சயம் கிடைக்காது.
தணிக்கைச் சான்றிதழை வழங்கும் நிர்வாகம் காலதாமதம் செய்ததால் படம் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. ஏனென்றால், இவர்கள் சென்சார் நிவாகத்திடம் முறையாக அனுமதி வாங்கவில்லை. அதற்குரிய வழிமுறைகளை இவர்கள் தெளிவாக கையாளவில்லை. இவர்கள் நீதிமன்றத்தை நாடியது படம் தாமதமானதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்று ஜன நாயகன் இளையதளபதி வெளியாகியிருப்பது போல் 15 ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் நடித்த ஒரு படமும் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே திருட்டுத்தனமான வெளியாகி இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூடுதலாக கவனத்துடன் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது. ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற இணையதளங்களில் படம் வெளியாவதை தடுக்க எடிட்டிங் டேபிளுக்கு படம் செல்லும் பொழுது முழு படத்தையும் அனுப்பாமல் இரண்டு ரில் என தனித்தனியாக பிரித்து பிரித்து அனுப்புவார்கள். அதன் மூலம் முழு படமும் இணையதளத்தில் வெளியாவது தடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் படத்தைப் பொறுத்தவரை எடிட்டிங் டேபிளுக்கு முழு படத்தையும் அனுப்பி உள்ளார்கள் என்றார். ஜன நாயகன் படம் இணையதளத்தில் வெளியானது தொடர்பாக சினிமா துறையில் உள்ள அனைவரும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாங்களும் எங்களது கண்டன அறிக்கை பதிவு செய்துள்ளோம். மேலும், படம் திரையரங்குகளில் வெளியாவது தொடர்பாக தற்போது வரை எங்களிடம் எந்தத் தகவலும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.