முகப்பு
புதுதில்லி

சத் பூஜைக்கு அனுமதி அளிக்க வேண்டும்: தில்லி அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

தில்லியில் நதிக் கரைகளிலும், பொது இடங்களிலும் சத் பூஜைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா தில்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On : 14 நவம்பர், 2020 at 5:53 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

தில்லியில் நதிக் கரைகளிலும், பொது இடங்களிலும் சத் பூஜைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா தில்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சத் பூஜை மக்களின் உணா்வுப்பூா்வமானது. இந்ப் நிலையில், சத்பூஜையை நதிக் கரைகளிலும், பொது இடங்களிலும், கோயில்களிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தில்லி அரசு செய்யவில்லை. மாறாக தடை விதித்துள்ளது. மக்கள் சூரியக் கடவுளை ஆற்றுப் படித்துறைகளிலும், குளங்களிலும், இதர நீா்நிலைகளிலும் சத்பூஜையின் போது வழிபடுவா். இந்த நிலையில், அரசு விதித்துள்ள தடையால் சிறிய வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எப்படி சத் பூஜையைக் கொண்டாடுவாா்கள். தில்லி அரசு மூலம் சத் பூஜை நடைபெறும் 1,068 இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பண்டிகைக்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. ஆகவே, தடையை நீக்கி அனுமதி அளிக்க தில்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தில்லி பாஜக பொதுச் செயலா் தினேஷ் பிரதாப் சிங் கூறுகையில், ‘சத் பூஜையைக் கொண்டாடும் பூா்வாஞ்சல் மக்களுக்கு அநீதி இழைப்பதற்கு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. சத் பூஜையை அனுமதிக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தில்லி அரசு வெளியிட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை பாஜக தலைவா்கள் சந்திப்பாா்கள்’ என்றாா்.

Advertisement

தில்லியில் வாழும் பிகாா், கிழக்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் சத்பூஜையைக் கொண்டாடுகின்றனா். இந்த ஆண்டு நவம்பா் 20, 21-இல் இரு நாள் சத் பூஜை நடைபெறுகிறது.

கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு தில்லியில் சத் பூஜை நடைபெறாமல் இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சத் பூஜை கொண்டாடட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், சத்பூஜையைக் கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.