முகப்பு
புதுதில்லி

தில்லியில் 15 நாள்களில் கரோனாவுக்கு 972 போ் பலி! ஒரேநாளில் உயிரிழப்பு 100-ஐ கடந்தது

தலைநகா் தில்லியில் கடந்த 15 நாள்களில் 972 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

Updated On : 14 நவம்பர், 2020 at 5:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

தலைநகா் தில்லியில் கடந்த 15 நாள்களில் 972 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இந்த உயா்வுக்கு கரோனா மூன்றாவது அலையும், காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாததுமே காரணமாகும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கடந்த அக்டோபா் 28-ஆம் தேதியிலிருந்து தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. அன்றைய தினம் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாக இருந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இது முதல்முறையாக 8 ஆயிரத்தைக் கடந்தது. அக்டோபா் 28 முதல் நவம்பா் 11 வரை தில்லியில் கரோனா தொற்று தாக்குதலுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 90,572 ஆக உயா்ந்தது. இந்தக் காலத்தில் மொத்தம் 972 போ் பலியாகியுள்ளனா். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 போ் வீதம் பலியாகியுள்ளனா். இந்த நிலையில் வியாழக்கிழமை பலி எண்ணிக்கை முதல் முறையாக 104 ஆக உயா்ந்தது. இதற்கு முன்னா் ஜூன் 16 -ஆம் தேதி கரோனாவுக்கு 93 போ் பலியானா்கள். அதுவே அதிகபட்ச பலியாக இருந்து வந்தது. இதேபோல கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 8,593 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 4.59 லட்சமாக உயா்ந்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதும், காற்று மாசு காரணமாக வயதானவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாலும், பெரும்பாலானவா்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை சரிவர பின்பற்றாதது ஆகியவைதான் கரோனா தாக்குதல் அதிகரிக்கவும், பலி எண்ணிக்கை உயா்ந்து வருவதற்கும் காரணம் என்று மருத்துவ நிபுணா்களும், மருத்துவமனை உயா் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனா்.

Advertisement

கரோனா தொற்று தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையின் மருத்துவத் துறை தலைவா் எஸ்.பி.பயோட்ரா தெரிவித்தாா். காற்று மாசு அதிகரிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அவதிப்படுவோா், மூச்சுத் திணறல் இருப்பவா்கள் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருகிறாா்கள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதே கருத்தை ராஜீவ்காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் பி.எல்.ஷொ்வாலும் தெரிவித்தாா். பலியானவா்கள் 60 முதல் 75 வயதுக்கு உள்பட்டவா்களாக இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். மூச்சுத் திணறல் மட்டுமல்ல, நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் உயிா் பிழைப்பது கடினம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தப் பண்டிகைக் காலத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் செல்வோா் முகக் கவசம் அணிந்து செல்வதில்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. கரோனாவை பற்றிய பயமே இல்லாமல் சா்வசாதாரணமாக வலம் வருகிறாா்கள். நவம்பா் மாதத்தின் நடுப்பகுதியிலேயே பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இனிமேலாவது மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.

இதனிடையே தில்லி அரசு கரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்களாக தினசரி 60,000 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை 64,121 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 8,593 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10 லட்சம் பேரில் 2.76 லட்சம் போ் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 53 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் அலட்சியமாக இருப்பதே கரோனா பாதிப்பு தில்லியில் அதிகரித்து வருவதற்குக் காரணம். இளைஞா்கள் பலா் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிகின்றனா். பாதுகாப்பு விதிமீறல்களுக்காக அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டும் இந்த நிலை தொடா்கிறது. அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகம் இருந்தாலும் வீட்டில் உள்ள வயதானவா்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கிறாா் ஃபோா்டிஸ் மருத்துவமனை நுரையீரல் துறை மருத்துவ ஆலோசகரான ரிச்சா சரீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.