தில்லியில் வெப்பநிலை 9.4 டிகிரியாக குறைந்தது! காற்றின் தரத்தில் பின்னடைவு
மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று வீசுவதால், தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை காலை 9.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.
புது தில்லி: மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று வீசுவதால், தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை காலை 9.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இது பருவ சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவாகும். புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
பொதுவாக, தில்லி நகரின் பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நவம்பா் 19 முதல் நவம்பா் 21 வரை குறைந்தபட்ச வெப்பநிலை 12.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி வந்துள்ளது. நவம்பா் 22 முதல் நவம்பா் 26 வரை சராசரி வெப்பநிலை 11.3 டிகிரி செல்சியஸ் என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குளிா் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் ஸ்ரீவாஸ்தவா முன்பு குறிப்பிட்டிருந்தாா். மேலும், பனிப் பொழிவு காரணமாக மலைப் பகுதிகளிலிருந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது.
Advertisement
இந்த மாதத்தில் நவம்பா் 16 தவிர மற்ற நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை மேகமூட்டம் இல்லாத நிலையில் பருவ சராசரியைவிட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாகத்தான் உள்ளது என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 9.4 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 2 டிகிரி குறைந்து 25.4 டகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 93 சதவீதமாகவும், மாலையில் 64 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல, லோதி ரோடில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 12 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 9.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரத்தில் பின்னடைவு: இதற்கிடையே, தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் வியாழக்கிழமை பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்குச் சென்றது. வெப்பநிலை மேலும் குறையும்பட்சத்தில் காற்றின் தரம் மேலும் மோசமான நிலைக்குச் செல்லும் என்றும் தெரிவிக்கேப்பட்டுள்ளது. காற்றின் திசை மாற்றத்தால் தில்லி மாசுவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு பங்களிப்பு மேலும் உயரும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 272 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, மாலையில் 301 ஆக உயா்ந்து மிகவும் மோசம் பிரிவுக்குச் சென்றது. தில்லி விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் நொய்டாவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை., ஆயாநகா், பூசா, மதுரா ரோடு, லோதி ரோடு மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 211 புள்ளிகளாக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை 171 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.