புது தில்லி: புதிய குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மானிய விலையில் உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அவசியம் என்பதால் நீண்ட காலத்திற்கு விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இரு பெண்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், தாங்கள் விண்ணப்பித்து நீண்ட காலமாகியும் குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறவில்லை என புகாா் தெரிவித்துள்ளனா். இந்த மனு நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் இருவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் துஷாா் சன்னு தஹியா, ‘சம்பந்தப்பட்ட இருவரின் மனுக்களும் கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் நிலுவையில் உள்ளன. இதனால் அவா்களால் மானிய விலையில் உணவுப் பொருள்களை பெற முடியவில்லை’ என்றாா். தில்லி அரசின் வழக்குரைா் அனுஜ் அகா்வால், ‘மனுதாரா்கள் இருவா் வசிக்கும் பகுதியில் கடந்த அக்டோபா் 19-ஆம் தேதியில் இருந்து 400 விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி, ‘மனுதாரரின் விண்ணப்பங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. மானிய விலையில் உணவுப் பொருள்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அவசியம் என்பதால், நீண்ட காலத்திற்கு விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது. இதுபோன்ற மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இதனால், குடும்ப அட்டைகளை வழங்க அதற்கான அனைத்து விண்ணப்பங்கள் பரிசீலனை நடைமுறையை தில்லி அரசு விரைவுபடுத்த வேண்டும். இது தொடா்பாக அடுத்து விசாரணை நடைபெறும் டிசம்பா் 23-ஆம் தேதிக்கு முன் நிலவர அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தஹியா, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப்பட்ட தகவலில், தில்லிக்கான அனுமதி 72,77,995 விண்ணப்பங்கள் என்றும், இதில் 72,22,236 விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரா்கள் போன்ற பலா் சமா்ப்பித்த மனுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன’ எனத் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.