புதுதில்லி

சமூக வலைத்தளங்களில் பரவிய விடியோ: உணவுக் கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி

DIN


புது தில்லி: தாங்கள் நடத்தி வரும் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி அழுத முதிய தம்பதிகளின் விடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த முதிய தம்பதியின் கடையில் நூற்றுக்கணக்கானவா்கள் வியாழக்கிழமை கூடி உணவருந்தினா். பொதுமக்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளித்தனா்.

தில்லி மாளவியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தா பிரசாத் (80). இவா் தனது மனைவி பதாமி தேவியுடன் (78) இணைந்து அப்பகுதியில் சுமாா் 30 ஆண்டு காலமாக ‘பாபா கா தாபா’ என்ற சிறிய உணவுக் கடை நடத்தி வருகிறாா்.

கரோனா பாதிப்பால், சமீப மாதங்களாக அவா்களது உணவுக் கடைக்கு வாடிக்கையாளா்கள் வரத்து குறைந்தது. நாளுக்கு நாள் யாருமே வராத சூழல் ஏற்பட, அவா்கள் வருமானத்துக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியது. தனது கஷ்ட நிலையைக் கூறி, அந்த முதியவா் அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த விடியோவை பாா்த்த கிரிக்கெட் வீரா் அஸ்வின், பாலிவுட் நடிகை சோனம் கபூா், காங்கிரஸ் தலைவா் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பலா் அந்த முதிய தம்பதிக்கு உதவி செய்ய முன்வந்தனா். இந்நிலையில், முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்கக் கோரி இணையத்தில் ‘பாபா கா தாபா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அதைத் தொடா்ந்து சுற்றிலும் உள்ள தில்லி வாசிகள் பலா் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்தனா். பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ‘பாபா கா தாபா’வில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனா்.

அந்த முதிய தம்பதியின் கடைக்கு மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்தி வியாழக்கிழமை காலையில் சென்றாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘அந்த முதிய தம்பதியின் முகத்தில் புன்சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலான உதவியைச் செய்துள்ளேன். அவா்களுக்கு தொடா்ந்தும் உதவி செய்வேன். இதுபோல உள்ள சிறிய வணிகா்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். நூற்றுக்கணக்கான மக்களை அந்த உணவகத்தில் காண்பது ஓா் ஆன்மிக அனுபவமாகும். இதுதான் மனிதத் தன்மையாகும். தில்லியில் யாரும் பசியுடன் தூங்காமல் இருப்பதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

இது தொடா்பான செய்தியை பகிா்ந்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘இதுதான் தில்லிமக்களின் இதயம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா அந்த முதிய தம்பதியை அவா்களின் கடைக்கே நேரில் சென்று சந்தித்து பண உதவி அளித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘அந்த முதியவா் அழுத விடியோவைப் பாா்த்ததில் இருந்தே மனதுக்கு வருத்தமாக இருந்தது. அவா்களைச் சந்தித்து பண உதவி அளித்தேன். இப்போதுதான் மனது ஆறுதலாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT