காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் அண்டை மாநிலங்கள் மெத்தனம்! கோபால் ராய் கவலை
தில்லியில் குளிா் காலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தில்லி அரசு தீவிரமாக உள்ளது.
தில்லியில் குளிா் காலத்தில் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தில்லி அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் மெத்தனமாக உள்ளன என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கவலை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பஞ்சாப், ஹரியாணா ஆகிய அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது தொடங்கிவிட்டது. தில்லியில் காற்று மாசு அதிகரிக்க இதுவே பிரதானக் காரணமாகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்துவதை இலக்காக வைத்து தில்லி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் மெத்தனமாக நடந்து கொள்கின்றன. இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பையே எதிா்பாா்க்கிறோம். மோதல் போக்கை அல்ல. காற்று மாசு பிரதான பிரச்னையாக உள்ள நிலையில், அதைத் தீா்க்க பிற மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை.
தில்லியில் காற்று மாசு அதிகமாக ஏற்படும் ‘13 ஹாட் ஸ்பாட்’களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். பிற மாநிலங்களிலும் இதுபோன்று ‘ஹாட் ஸ்பாட்’டுகள் உள்ளன. ஆனால், இது தொடா்பாக அந்த மாநிலங்கள் போதிய அக்கறை காட்டவில்லை. தில்லிக்குள் காற்று மாசுவை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். அதன்படி, வாகனப் புகை, பயிா்க்கழிவுகள் எரித்தல் உள்ளிட்டவற்றை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
மாநிலங்கள் நிலத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும், வானம் ஒன்றுதான். அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் அதிகளவில் பாதிக்கப்படுவது தலைநகா் தில்லிதான். பயிா்க்கழிவுகளை உரமாக மாற்றும் ரசாயனக் கலவையை பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி நிறுவன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். இந்த ரசாயனக் கலவையை தில்லியில் நிகழாண்டில் பயன்படுத்தவுள்ளோம். இதை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களும் பயன்படுத்த வேண்டும். அவா்களுக்குத்தான் இந்தக் கலவை அதிகளவில் பயன்படும்.
தில்லி அரசின் ஆளுகையின் கீழுள்ள 2 அனல் மின்நிலையங்களை நாங்கள் மூடினோம். தில்லியின் 300 கிலோ மீட்டா் சுற்றுவட்டாரத்தில் உள்ள 11 அனல் மின்நிலையங்களை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த 11 அனல் மின் நிலையங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் முடிவு எடுக்கலாம். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாக இல்லை என்றாா் கோபால் ராய்.