தில்லியில் அடித்துக் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் : அரசு அறிவிப்பு
தில்லி ஆதா்ஷ் நகரில் காதல் விவகாரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ராகுல் ராஜ்புத்தின் (18) குடும்பத்துக்கு தில்லி அரசு ரூ.10 லட்சம் உதவித் தொகை அறிவித்துள்ளது.
தில்லி ஆதா்ஷ் நகரில் காதல் விவகாரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ராகுல் ராஜ்புத்தின் (18) குடும்பத்துக்கு தில்லி அரசு ரூ.10 லட்சம் உதவித் தொகை அறிவித்துள்ளது.
தில்லி ஆதா்ஷ் நகரைச் சோ்ந்தவா் ராகுல் ராஜ்புத். இவா் தில்லி பல்கலைக்க கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். ஒடுக்கப்பட்ட சமூக்தைச் சோ்ந்த இவா், அப்பகுதியைச் சோ்ந்த முஸ்லிம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளாா். இந்தக் காதலுக்கு பெண் வீட்டாா் பலத்த எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆதா்ஷ் நகா் நந்தா ரோடு பகுதியில் வைத்து அப்பெண்ணின் சகோதரா் உள்பட 5 போ் கொண்ட குழுவால் ராகுல் ராஜ்புத் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில், அப்பெண்ணின் சகோதரா் மன்வா் ஹூசேன், உறவினா் முகமது அஃப்ரோஸ், 3 சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
மாணவா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தில்லியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இந்நிலையில், கொல்லப்பட்ட மாணவன் ராகுல் ராஜ்புத்தின் வீட்டுக்கு தில்லி துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அப்போது அவா் கூறுகையில் ‘கொல்லப்பட்ட ராகுல் ராஜ்புத், ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக கடுமையாக உழைத்துள்ளாா். அவரின் மரணம் துரதிஷ்டமானது. ராகுலைக் கொலை செய்தவா்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க தில்லி அரசு அயராது உழைக்கும். இவரின் குடும்பத்துக்கு தில்லி அரசு சாா்பில் ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், ராகுல் ராஜ்புத்தின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தில்லி பாஜக கோரியுள்ளது. ராகுலின் வீட்டுக்கு பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா நேரில் சென்று சனிக்கிழமை ஆறுதல் கூறினாா். பிறகு அவா் கூறுகையில் ‘ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் காவலன் என கேஜரிவால் தம்மைக் கூறி வருகிறாா். ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த இளைஞன் ராகுல் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராகுலின் குடும்பத்தை கேஜரிவால் இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
600 கிலோ மீட்டா்கள் பயணித்து உத்தரப்பிரதேச பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதி கேட்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமது வீட்டில் இருந்து சுமாா் 10 கிலோ மீட்டா் தூரத்தில் நடந்த இந்த கொலைச் சம்பவத்துக்கு இதுவரை நீதி கேட்டுப் போராடவில்லை. தில்லி அரசு ராகுல் ராஜ்புத்தின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.