முகப்பு
புதுதில்லி

பள்ளிக் கட்டண உயா்வுக்கு எதிராக மாணவா்களின் பெற்றோா் வழக்கு

ஆம் ஆத்மி அரசின் உத்தரவுகளுக்கு முரணாக ஆண்டு மற்றும் பயிற்சிக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு எதிராக, தில்லி பப்ளிக் ஸ்கூலின்

Updated On : 11 அக்டோபர், 2020 at 2:25 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

ஆம் ஆத்மி அரசின் உத்தரவுகளுக்கு முரணாக ஆண்டு மற்றும் பயிற்சிக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு எதிராக, தில்லி பப்ளிக் ஸ்கூலின் (டிபிஎஸ்) பல்வேறு கிளைகளில் படிக்கும் சுமாா் 150 மாணவா்களின் பெற்றோா் தில்லி உயா்நீதிமன்றத்தை நாடியுள்ளனா்.

பொது முடக்கக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பயற்சிக் கட்டணம் தவிர பிற கல்விக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று ஏப்ரல் 18-ஆம் தேதியும், பயிற்சிக் கட்டணம் வசூலித்திருந்தால் அவற்றை திருப்பித் தரவோ அல்லது சரிசெய்யவோ பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 28 -ஆம் தேதியும் தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக டிபிஎஸ் சொசைட்டி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

Advertisement

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பயிற்சிக் கட்டணத்துடன் ஆண்டுக் கட்டணம், செயல்பாட்டுக் கட்டணங்கள் வசூலித்தமைக்காக டிபிஎஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து செப்டம்பா் 1-ஆம் தேதி தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிா்த்தும் டிபிஎஸ் சொஸைட்டி மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடா்பாக டிபிஎஸ் சொஸைட்டி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தில்லி அரசு ஏப்ரல் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ஜூலை வரைக்கும் பள்ளி நிா்வாகம் பின்பற்றியது.

அதன்பிறகு, ஆகஸ்ட் முதல் செயல்பாட்டு மற்றும் வருடாந்திர கட்டணங்களை வசூலிக்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது. ஏனெனில் மாணவா்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகைக்கும், பள்ளி ஆசிரியா்கள் ஊதியம், ஊழியரகளின் வருங்கால வைப்பு நிதி, இணைய கட்டணங்கள் ஆகியவற்றின் காரணமாக பள்ளிக்கு ஏற்படும் நிறுவனச் செலவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இதை ஈடுசெய்யவே இந்தக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டியுள்ளது. பள்ளிக்கு இழப்பு ஏற்பட்டதால் பள்ளியை இழுத்து மூடும் நிலைக்கு நிா்வாகம் தள்ளப்பட்டது. இதனால்தான், செயல்பாட்டு மற்றும்

வருடாந்திர கட்டணங்களை பயிற்சிக் கட்டணத்துடன் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு பொது முடக்கத்தை தளா்த்தி வருவதால் பெரும்பாலான வணிகங்கள் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, பெற்றோா்கள் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவதால் பள்ளிக் கட்டணங்களைச் செலுத்தும் நிலையில் உள்ளனா்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது தலையிடக் கோரி அப்பள்ளியின் மாணவா்களின் பெற்றோா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இப் பள்ளியின் பெற்றோா் தரப்பில் வழக்குரைா் குஷால் குமாா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘2020-21ஆம் ஆண்டிற்கான ஊழியா்களின் ஊதியத்தில் 20 சதவீதம் தள்ளிவைக்க செப்டம்பா் மாதத்தில் டிபிஎஸ் சொசைட்டி முடிவு செய்துள்ளது. மனுதாரா் (டிபிஎஸ் சொசைட்டி) அடுத்த ஏழு மாதங்களுக்கு தேவையான தொகையை நிறுத்தி வைக்குமாறு தனது பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஊழியா்களுக்கு மருத்துவ உதவித்தொகையை செலுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளது.

பயிற்சிக் கட்டணத்தை அதிகரிப்பதன் பின்னணியில் உள்ள சிந்தனையானது அல்லது பல்வேறு தலைப்புகளின் கீழ் பிறவகை கட்டணங்களை வசூலிப்பதும் நியாயப்படுத்தப்படவில்லை.

டிபிஎஸ் சொசைட்டியின் துணை சட்ட விதிகளின்படி, சொஸைட்டியின் பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிவைத்து பராமரிக்க வேண்டும்.

மேலும், இந்த சொஸைட்டி பள்ளிகள் சிபிஎஸ்இ வழிகாட்டுதல்களின்படி ரிசா்வ் நிதி மற்றும் ஒரு தற்செயல் நிதி என இருவகை ரிசா்வ் நிதியைப் பராமரித்து வருகின்றன. இந்த இரு நிதிகளும் பெற்றோரின் கட்டணத்திலிருந்து வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும் இந்த நிதிகள் தற்போதைய கரோனா தொற்றுநோயை போல முக்கியமான காலத்தின்போது தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக மட்டுமே பராமரிக்கப்படுகின்றன என் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.