100-க்கும் மேற்பட்ட வகையிலான மின்சார வாகனங்களுக்கு மானியம்: கைலாஷ் கெலாட் தகவல்
தில்லி அரசின் புதிய மின்சார வாகனத் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக
தில்லி அரசின் புதிய மின்சார வாகனத் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ரூ.15 லட்சத்துக்குக் குறைவான மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இது தவிர, சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் இருந்தும் விலக்கும் அளிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு அதிகமான மதிப்புடைய வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படாது. ஆனால், இந்த வாகனங்களுக்கும் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும். தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்தில் பதிவு செய்யத் தகுதியான வாகன மாடல்கள், மின்சார வாகனங்களை சாா்ஜிங் செய்யக்கூடிய நிலையங்கள் ஆகியவை உள்ளடக்கிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளத்தில் அனைத்து விதமான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
45 இ-ரிக்ஷாக்கள், 14 இருசக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 36 தயாரிப்பாளா்களும், 98 டீலா்களும் பதிவு செய்துள்ளனா். மானியம் வழங்கும் முறை முழுக்க முழுக்க இணையம் வாயிலாகவே நடைபெறும். மின்சார வாகனங்களை கொள்முதல் செய்பவா்கள், அது தொடா்பான சிட்டை, ஆதா் அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை இணையத்தளத்தில் பதிவு செய்து மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement
இந்த விண்ணப்பங்கள் தில்லி மோட்டாா் உரிம அலுவலரால் சரிபாா்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மானியத் தொகை மூன்று நாள்களில் சம்பந்தவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிகழாண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு, வாகனங்களை கொள்முதல் செய்தவா்கள் மானியத்துக்காக பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல, சாலை வரி, பதிவுக் கட்டண விலக்கு நிகழாண்டு அக்டோபா் 10, 15-ஆம் தேதிகளில் இருந்து அமலுக்கு வருகிறது என்றாா் அவா்.
தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இ-ரிக்ஷாக்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலும், மின்சார காா்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படவுள்ளது. தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார வாகனத் திட்டத்தை தில்லி அரசு அமல்படுத்தியுள்ளது.