தில்லியில் தொடா்ந்து மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்!
தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியது. அதாவது, நகரில் காலையில்
தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியது. அதாவது, நகரில் காலையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 346 புள்ளிகளாகவும், மாலையில் 339 புள்ளிகளாகவும் பதிவானது.
இதுகுறித்து அரசுத் தரப்பு நிறுவனங்கள் கூறுகையில், ‘சனிக்கிழமை தில்லியின் முண்ட்கா, வாஜிா்பூா், அலிப்பூா் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்தது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மேலும் மோசடையும். மேலும், அடுத்த இரு தினங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடையும்’ என்று தெரிவித்தன.
நகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 374 புள்ளிகளாகவும், மாலையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 366 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.
Advertisement
காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.
மத்திய அரசின் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் கூறுகையில், தில்லியில் மாசு நுண்துகள் பிஎம் 10 அளவு சனிக்கிழமை 301 புள்ளிகளாகவும், பிஎம் 2.5 அளவு 165 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது. அக்டோபா் 26-ஆம் தேதியில் காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு இருக்க வாய்ப்புள்ளது.
ஹரியாணா, பஞ்சாப் மற்றும் அண்டை பிராந்தியங்களில் பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை 1,213 ஆக இருந்தது. மிகவும் அமைதியான தரைமேற்பரப்பு காற்றுச் சூழல் தில்லி பிராந்தியத்தில் அடுத்த இரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. இது மாசுபடுத்திகள் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும் ’ என்றது.
காற்றின் தரக் குறியீட்டை கண்காணிக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்ட ‘ சமீா் ’ செல்லிடப்பேசி செயலின் தகவலின்படி, தில்லியில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் 10 நிலையங்களில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் கடுமை பிரிவில் பதிவாகி இருந்தது.
வானிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 14.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 33.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்தது.