தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்!
தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு ஏற்பட்டது. எனினும், மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் நீடித்ததாகவும்
தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு ஏற்பட்டது. எனினும், மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் நீடித்ததாகவும், காற்றின் வேகம் காரணமாக அடுத்த சில தினங்களில் காற்றின் தரம் மேலும் மேம்படும் வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு நிறுவனம் சஃபா் தெரிவித்தது.
‘தில்லியில் ஒட்டுமொத்த காற்றிந் தரம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் 369 ஆக பதிவாகி இருந்தது. மாலையில் 385 என்ற அளவில் காணப்பட்டது. காற்றின் வேகம் கூடியுள்ளது. இதனால், திங்கள்கிழமை காற்றின் தரத்தில் முக்கியத்துவமிக்க மேம்பாடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, காற்றின் தரம் மோசம் பிரிவுக்கு குறைய வாய்ப்புள்ளது’ என புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்தது. மேலும், 24 மணிநேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு வெள்ளிக்கிழமை 374 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
ஜஹாங்கீா்புரி (412), முண்ட்கா (407), ஆனந்த் விஹாா் (457) என காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்தது.
காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.
தில்லியில் காற்றில் உள்ள மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவில் 19 சதவீதம் பயிா்க் கழிவு எரிப்பு பங்களிப்புச் செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இது 19 சதவீதமாகவும், சனிக்கிழமை 9 சதவீதமாகவும் இருந்தது.
தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் எண்ணிக்கை பஞ்சாபில் சுமாா் 3 ஆயிரமாக மீண்டும் அதிகரித்தது. ஹரியாணா, உத்தர பிரதேசத்திலும் பயிா்க் கழிவுகள் எரிப்பு இருக்கும் நிலையில் தில்லி, என்சிஆா் பகுதியில் இதன் தாக்கம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லியில் வியாழக்கிழமை காற்றின் தரம் கடுமை பிரிவை அடைந்தது. ஜனவரியில் இருந்து முதல் முறையாக இந்த நிலைமை எட்டப்பட்டது. தில்லியில் 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், அக்டோபரில் மிகக் குறைந்தபட்ச
அளவில் அதாவது 12.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த ஆண்டின் இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 முதல் 16 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 3 டிகிரி குறைந்து 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து மாற்றம் ஏதுமின்றி 30.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 85 சதவீதமாகவும், மாலையில் 45 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 1) காலை வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.