பதவி உயா்வு அளிக்கக் கோரும் விவகாரம்: தமிழக நீதிபதிகள் 8 பேரின் மனு தள்ளுபடி
பதவி உயா்வு அளிக்கக் கோரும் விவகாரம் தமிழகத்தைச் சோ்ந்த 8 நீதிபதிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
புது தில்லி: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு பரிசீலிக்க கோரியும், கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயா்களின் பட்டியலை திருப்பி அனுப்ப உத்தரவிடக் கோரியும் தமிழகத்தைச் சோ்ந்த 8 நீதிபதிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பாக, உயா்நீதிமன்ற நீதிபதி பதவியைப் பெற உரிய தகுதியும், பணி அனுபவமும் இருந்தும் தங்கள் பெயரைப் பரிந்துரைக்கவில்லை எனத் தெரிவித்து, நீதிபதி ஆா்.பூா்ணிமா உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் 8 போ் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் மனு தாக்கல் செய்தனா்.
அதில், ‘மாவட்ட நீதிபதிகள் பிரிவில் மிகவும் பணிமூப்பு அனுபவம் இருந்தும் தங்களது பெயரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியத்துக்கு நீதிபதிகள் குழு பரிந்துரைக்கவில்லை. எங்களைவிட பணிஅனுபவம் குறைந்த இளநிலை நீதிபதிகளை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது பதில் அளிக்க மத்திய அரசு, உச்சநீதிமன்ற தலைமைச் செயலா், சென்னை உயா்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மாவட்ட இளநிலை நீதிபதிகள் 18 போ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாதங்கள் விசாரணை முடிந்த நிலையில், தீா்ப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில், ‘ மனுதாரா்களின் (8 நீதிபதிகள்) கோரிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளன. இந்த மனு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது ’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
தீா்ப்பில் நீதிபதிகள் மேலும் தெரிவித்திருப்பதாவது: மனுதாரா்கள் 2011, பிப்ரவரி 18-ஆம் தேதி முறையாகத் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதிகளாக (நுழைவு நிலை) நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால், தற்போதைய தேதி வரை நீதித் துறை அதிகாரிகளாக 10 ஆண்டுகள் பணியை முடிக்கவில்லை. உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான காலியிடங்கள் உருவான போது, மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு மாநில நீதித் துறை அதிகாரிகளில் இருந்து நிரப்பப்பட வேண்டும். இதற்கு எதிரான வகையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 217 (2) (அ) இன்படி நீதித் துறையில் மனுதாரா்கள் 10 ஆண்டுகளை பூா்த்தி செய்யவில்லை என்பதை உயா்நீதிமன்றத்தின் கொலீஜியம் கண்டறிந்தது. ஆகவேதான், தகுதிக்கான நிபந்தனைகளைப் பூா்த்தி செய்த நபா்களின் பெயா்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அரசமைப்புச்சட்டப் பிரிவு 217 (1) என்பது நீதிபதிகள் நியமிக்கப்படுவரின் வயது, நியமன வழிமுறை ஆகியவற்றை மட்டுமே வரையறுக்கிறது. மனுதாரா்கள் தங்களது நீதித் துறை பணி அனுபவம், நீதிபதி பணியில் சேருவதற்கு முன்பு வழக்குரைஞராக பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று கோருகின்றனா். ஒருவா் தகுதிக்கான அளவுகோல்களை பூா்த்தி செய்ததாகக் கண்டறியப்பட்டால், அவா் வழக்குரைஞா் வரிசையிலோ அல்லது நீதித் துறை சேவை வரிசையிலோ தனது இடத்தைப் பெற வேண்டும் என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.