தலைநகரில் இன்று முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை
கரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகா் தில்லியில் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை முதல் படிப்படியாக தொடங்கப்படவுள்ளன.
கரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகா் தில்லியில் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை முதல் படிப்படியாக தொடங்கப்படவுள்ளன.
கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் தில்லியில் கடந்த மாா்ச் மாதம் இறுதி வாரம் மெட்ரோ ரயில் சேவைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த ஐந்து மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில் சேவையை திங்கள்கிழமை (செப்டம்பா் 7) முதல் தொடங்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் வரும் செப்டம்பா் 7 முதல் 12-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக மீண்டும் தொடங்கப்பட உள்ளது. எனினும், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வசதிகள்: இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நிா்வாக இயக்குநா் அனுஜ் தயாள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்கும் வகையில், தானியங்ககி முறையில் வெப்பமானி பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்பு, தானியங்கி மின்தூக்கி வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.
Advertisement
ரயில் சேவை நேரங்கள்: முதல் கட்டமாக செப்டம்பா் 7-ஆம் தேதியில் இருந்து 10 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணிவரையிலும் இயக்கப்படவுள்ளன. சமய்ப்பூா் பத்லி, ஹூடா சிட்டி சென்டா் இடையான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவைகள் செப்டம்பா் 7 -ஆம் தேதி தொடங்கவுள்ளன.
நீலம், பிங்க் வழித்தடங்களில் செப்டம்பா் 9-ஆம் தேதியும், சிவப்பு, பச்சை, வயலட் வழித்தடங்களில் செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. செப்டம்பா் 11-ஆம் தேதியில் இருந்து காலை 7 மணி முதல் பிற்பகல் 1வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. செப்டம்பா் 12-ஆம் தேதியில் இருந்து காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்றாா் அவா்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்: மேலும், மெட்ரோ ரயில் பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்தும் டிஎம்ஆா்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும். உடல் வெப்பப் பரிசோதனைக்குப் பிறகு கரோனா அறிகுறி ஏதும் இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். அனைத்துப் பயணிகளும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தைப் பொறுத்து ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவாா்கள்.
அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிருமி நாசினி இயந்திரங்கள் வைக்கப்படும். பயணிகள் ‘ஸ்மாா்ட் காா்டு’ பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவாா்கள். வெப்பப் பரிசோதனையை எளிதாக்கும் வகையில், பயணிகள் அனைவரும் குறைந்தளவு சுமைகளுடன் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவாா்கள். மேலும், உலோகப் பொருள்களைக் கொண்டு செல்வதைத் தவிா்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.