முகப்பு
புதுதில்லி

பாகிஸ்தானுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது சரியா? பிரதமா் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி கேள்வி

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்து வருவதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், அந்த நாட்டிற்கு கரோனா உயிா்காக்கும் கரோனா

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்து வருவதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், அந்த நாட்டிற்கு கரோனா உயிா்காக்கும் கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையில் சரியாகும்? என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினரான ராகவ் சத்தா, பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நம் நாட்டு மக்கள் கரோனா தடுப்பூசி மருந்தை தேடிக் கொண்டு இருக்கின்றனா். இந்த நிலையில், மத்திய அரசு, தடுப்பூசியின் 64 மில்லியன் டோஸ்களை 84 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்திருப்பாகத் தெரிகிறது. இதில் 45 மில்லியன் டோஸ்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக வந்துள்ள செய்தி அதிா்ச்சியடைய வைக்கிறது. ஒரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மற்றோரு பக்கம், அந்த நாட்டிற்கு தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்கிறது.

நம் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோா் கரோனாவால் உயிரிழந்து வரும் நிலையில், மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் கொடுக்கிறது. தடுப்பூசி உலகமயமாக்கல் என்பதை விட தேசியவாதம்தான் காலத்தின் தேவை. இது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும். பல மாநிலங்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து கடிதம் எழுதியுள்ளன. மகாராஷ்டிரமும் ஆந்திரமும் முறையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. சத்தீஸ்கா், ஒடிஸா போன்ற மாநிலங்களில் கடுமையான பற்றாக்குறை உள்ளது. இதனால், நம் நாட்டிலுள்ள 135 கோடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன் பிறகுதான், சா்வதேச நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக பதிலடி: இந்தக் கடிதம் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் பரவீன் சங்கா் கபூா் கூறுகையில், ‘சத்தா ஓா் அழுக்கு அரசியல் விளையாட்டை நடத்திக் குழப்புகிறாா். அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இன்று கூட கரோனாவுக்கான ரெம்டெசிவிா் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments