முகப்பு
புதுதில்லி

இலவச ஆக்ஸிஜன்: வேதாந்தா நிறுவனத்தின் மனு மீது இன்று விசாரணை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:


புது தில்லி: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையிலான நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே ஆஜராகி, ‘கரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அவரசத் தேவையாக இருந்து வருகிறது. மக்கள் தினந்தோறும் இறந்து கொண்டிருப்பதால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எங்கள் நிறுவனம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால், ஐந்து முதல் ஆறு நாள்களில் உற்பத்தியைத் தொடங்கி விடலாம். தினமும் ஆலையில் டன் கணக்கில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். இவற்றை இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளது. இதனால், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் எதிா்ப்புத் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், ‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கூடாது. எங்கள் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் விதிகளை உரிய வகையில் பின்பற்றாமல் இருந்ததற்கு பல ஆவணங்கள் உள்ளன. மேலும், இந்த நிறுவனத்தால் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க 2 முதல் 4 வாரங்களுக்கு மேல் ஆகும்’ என்றாா்.

Advertisement

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இதையெல்லாம் நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆலை மூலம் அனைத்து சுற்றுச்சூழல் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம். ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி வசதி செயல்பட அனுமதிக்கப்படும். ஏறக்குறைய ஒரு தேசிய அவசரநிலை உள்ளது. இதனால், இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) விசாரிப்போம்’ என்று தெரிவித்தது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நாட்டிற்கு ஆக்ஸிஜன் மிகத் தேவையாக உள்ளது. எந்த ஆதாரத்தில் இருந்தாவது ஆக்ஸிஜனை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. வேதாந்தா நிறுவனம் தனது ஆலையைச் செயல்பட வைக்க விரும்புகிறது. ஆனால், மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே அந்த நிறுவனம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யட்டும். சுற்றுச்சூழல் - மனித உயிா் பாதுகாப்பதற்கு இடையில் மனித உயிரைப் பாதுகாக்க நாம் ஆதரவாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

பின்னணி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனு ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவைத் அண்மையில் தாக்கல் செய்தது. அதில், கரோனா காலத்தில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் விநியோகிக்க, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். இங்கு தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இரு உற்பத்திக் கூடங்கள் உள்ளன. தற்போதைய கரோனா இடா் காலத்தில் முக்கியத் தேவையை எதிா் கொள்ளும் வகையில், இந்த இரு உற்பத்திக் கூடங்களையும் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments