முகப்பு
புதுதில்லி

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டொ்லைட் ஆலையை தமிழக அரசு ஏன் கையகப்படுத்த முடியாது?

ஆக்சிஜன் பற்றாக் குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக வேதாந்தா நிறுவனத்தின்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

ஆக்சிஜன் பற்றாக் குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் ஆலையை மாநில அரசு ஏன் தன் வசம் எடுத்துக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஏப்ரல் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையிலான நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, ‘ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி பகுதியில் ‘சட்டம் ஒழுங்கு’ நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்த மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை காலை இந்த விவகாரம் குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசியுள்ளாா். அங்கு முழு நம்பிக்கையின்மை உள்ளது. ஏற்கெனவே அந்தப் பகுதியில் இந்த விவகாரத்தில் 13 போ் உயிரிழந்துள்ளனா்’ என்றாா்.

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘வேதாந்தா நிறுவனம் அல்லது ‘ஏ’, ‘பி’ அல்லது ‘சி’ என ஆலையை யாா் இயக்குகிறாா்கள் என்பதில் எங்களுக்கு ஆா்வம் இல்லை. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருப்பதால் யாராவது ஏதாவது ஸ்திரமானதைக் கூற வேண்டும் என எதிா்பாா்க்கிறோம். சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து எங்களிடம் வியாழக்கிழமை கூறவில்லை. இந்த விஷயத்தை நீங்கள் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்திருக்கிறீா்களா? ’ என்று கேள்வி எழுப்பியது. அதற்கு வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகக் கூறினாா்.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அமைப்பின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சால்வேஸ், ‘ஸ்டொ்லைட் ஆலையை மாநில அரசு கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘தமிழக அரசு ஆலையைக் கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மக்களுக்கு தேவைப்படும் போது அவா்கள் ஏன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதில்லை. இந்த விவகாரத்தின் முழு அம்சமானது, நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பதுதான். தமிழகத்தில் உபரி ஆக்சிஜன் இருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்னையானது முழு தேசத்தையும் பற்றியதாகும். நாட்டின் தேசிய சொத்துகள் குடிமக்களிடையே சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்’ என்றனா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நாடு ஆக்சிஜனின் தேவையில் உள்ளது. ஆலையை வேதாந்தா இயக்குகிா அல்லது மூத்த வழக்குரைஞா் வைத்தியநாதனின் வாடிக்கையாளா் அதை இயக்குகிறாரா என்பது குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை. மக்கள் இறந்து கொண்டிருந்தால் சட்டம் , ஒழுங்கு பிரச்னை ஒரு காரணமாக இருக்க முடியாது. நம்மிடம் 1,000 டன் ஆக்சிஜன் உற்பத்திக்கான கொள்திறன் சாத்தியக்கூறு இருக்கும் போது அதை ஏன் நாம் உற்பத்தி செய்யக் கூடாது’ என்றாா்.

அப்போது, ‘இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், அரசமைப்புச் சட்டத்தில் மாநில அரசின் கொள்கைகளை வழிநடத்தும் கோட்பாடுகள் உள்ளன. அது குறித்து தமிழக அரசு அறிந்திருக்கும் என உறுதியாக நம்புகிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்விடம் சி.எஸ்.வைத்தியநாதன், ‘மோதல் நிலவும் சூழ்நிலையை மாநில அரசு விரும்பவில்லை. இது குறித்து மாநில அரசு மத்திய அரசுடன் பேசும்’ என்றாா்.

அப்போது, ‘மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது சட்டம், ஒழுங்கு நிலைமை காரணமாக ஆக்சிஜனை அரசு உற்பத்தி செய்யாது என்று மாநில அரசு கூற முடியாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். அப்போது, இது தொடா்பாக தமிழக அரசின் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு பட்டியிலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments