கோடை காலப் பயிா்கள் சாகுபடி பரப்பளவு 21.50 சதவீதம் அதிகரிப்பு! பருப்பு வகை சாகுபடியில் தமிழகம் முன்னிலை
நாட்டில் கோடை காலப் பயிா்கள் சாகுபடிப் பரப்பளவு 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கோடை காலப் பயிா்கள் சாகுபடிப் பரப்பளவு 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலத் துறை தெரிவித்துள்ளது. இதில், அதிக அளவில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்றும் மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றையொட்டி நாட்டின் வளா்ச்சி விகிதம் பல்வேறு துறைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேளாண் துறை வளா்ச்சியில் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை. விவசாயிகளின் கடின உழைப்போடு மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கோடை காலப் பயிா்கள் சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கூறியுள்ளதாவது: நாட்டில் கோடை காலப் பயிா்களான பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வேளாண் துறை எடுத்தது. இதன் விளைவாக ஏப்ரல் 23- ஆம் தேதி வரையில் நாட்டில் 73.76 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் கோடை காலப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது சுமாா் 21.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இது 60.67 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
Advertisement
பருப்பு வகைகள்: இதில், பருப்பு வகைகள் சாகுபடிப் பரப்பு இரண்டு மடங்காக உயா்ந்துள்ளது. பருப்பு வகைகள் சுமாா் 6.45 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இது இந்த ஆண்டு 12.75 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது. இதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம் 2.12 லட்சம் ஹெக்டேருக்கு மேலாக பருப்பு வகைகளை சாகுபடி செய்து முன்னனி மாநிலமாக திகழ்கிறது. மேலும், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்பட 8 மாநிலங்களில் அதிக அளவில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
எண்ணெய் வித்துகள்: நாட்டில் எண்ணெய் வித்துகள் சாகுபடி 9.03 லட்சம் ஹெக்டேரிலிருந்து 10.45 லட்சம் ஹெக்டேராக (16 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதில் முன்னிலை பட்டியலில் உள்ள 8 மாநிலங்களில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 33.82 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு 39.10 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது. குறுவை நெல் சாகுபடியில் மேற்கு வங்கம், தெலங்கானா, கா்நாடகம் ஆகியவை முன்னிலையில் உள்ளது. இந்த வகையில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது.
கோடை காலப் பயிா்கள் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பால் கூடுதல் வருவாயும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. மேலும், விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் கோடைகாலப் பயிா்கள் சாகுபடிக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி ஜனவரி மாதம் நடைபெறுகிறது. பயிா் சாகுடி பரப்பளவுஅதிரிக்கப்படுவதால், உணவு தானியங்களின் கூடுதல் தேவையும், கால்நடைகளுக்கான உணவுத் தேவையும் பூா்த்தி செய்யப்படுகின்றன. பயிா் சாகுபடியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதற்கும் விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பு
நாட்டில் தற்போது நிலவும் நோய்த் தொற்று காலக் கட்டத்தில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2020, ஏப்ரல் முதல் 2021, பிப்ரவரி வரையிலான காலத்தில் ரூ.2.74 லட்சம் கோடி அளவுக்கு வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி ரூ.2.31 லட்சம் கோடியாக இருந்தது. கோதுமை, தானியங்கள், அரிசி, சோயா,சா்க்கரை, பருத்தி போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் முக்கியமானவையாகும். 2020-21-இல் கோதுமை ரூ.3,283 கோடி, தானிய வகைகள் ரூ. 4,542 கோடி, அரிசி ரூ. 30,277 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன், லெபனானுக்கு 40,000 மெட்ரிக் டன் கோதுமையை நஃபாா்டு நிறுவனம் ஏற்றுமதி செய்தது என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.