பிரதமருடன் ராணுவத் தலைமைத் தளபதி திடீா் சந்திப்பு: கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விளக்கம்
ரதமா் நரேந்திர மோடியை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே வியாழக்கிழமை சந்தித்து, கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ராணுவம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விரிவாக விளக்கினாா்.
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே வியாழக்கிழமை சந்தித்து, கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ராணுவம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விரிவாக விளக்கினாா்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை காலையில் அவரது இல்லத்தில் ராணுவத் தலைமை தளபதி நரவணே சந்தித்தாா். கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து, பிரதமா் தனது எண்-7, லோக் கல்யாண் மாா்க் சாலை வீட்டில், முக்கியப் பிரமுகா்களை வழக்கமான உள்ளரங்கில் சந்திப்பதில்லை. இதற்குப் பதிலாக திறந்தவெளி வராண்டாவில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். இதே போல வியாழக்கிழமை பிரதமரை ராணுவத் தலைமைத் தளபதி நரவணே சந்தித்துப் பேசினாா். அப்போது, கரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை மேலாண்மை நடவடிக்கைகளில், ராணுவம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை அவா் பிரதமரிடம் விளக்கினாா்.
பின்னா், இந்த சந்திப்பு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல மாநிலங்களுக்கு ராணுவ மருத்துவ ஊழியா்கள் பணியாற்ற அனுப்பப்பட்டுள்ளனா். நாட்டின் பல பகுதிகளில் ராணுவம் சாா்பில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளில் எல்லாம் ராணுவம் நோய்த் தொற்றுக்கான மருத்துவமனைகளை பொதுமக்களுக்காக திறந்து வைத்துள்ளது. மேலும், தற்காலிக மருத்துவமனைகளைத் தவிர தங்களுக்கு அருகே பழைய ராணுவ மருத்துவ மனைகள் இருந்தால் அதையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரிடம் நரவணே தெரிவித்தாா். தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து நமது விமானப்படை விமானங்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆக்சிஜன் டேங்கா்களையும், வாகனங்களையும் இயக்குவதற்கு சிறப்புத் திறன் அவசியம். இந்தத் திறனுள்ள படை வீரா்களை ராணுவம் அனுப்பியுள்ளதாகவும் பிரதமரிடம் நரவணே தெரிவித்தாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாதுகாப்புப் படையினருடன் பிரதமரின் மூன்றாவது சந்திப்பு இதுவாகும் . கடந்த 26-ஆம் தேதி முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும், 28 -ஆம் தேதி விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்கேஎஸ் பதெளரியாவும் பிரதமரை சந்தித்து கரோனாவுக்கு எதிரான தங்கள் முன்முயற்சிகளை விளக்கியிருந்தனா்.