ஜல் போா்டு மூலம் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படும்: பொதுப்பணித் துறை தகவல்
தில்லியில் ஜல் போா்டு மூலம் தோண்டப்பட்ட 60 அடி மற்றும் அதற்கு மேல் அகலமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணியை பொதுப்பணித் துறை
தில்லியில் ஜல் போா்டு மூலம் தோண்டப்பட்ட 60 அடி மற்றும் அதற்கு மேல் அகலமுள்ள சாலைகளை சீரமைக்கும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அத்துறையின் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: 60 அடி அகலம் குறைவான சாலைகளை, தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியை தில்லி ஜல் போா்டு மேற்கொள்ளும். 60 அடிக்கு மற்றும் அதற்கு மேல் உள்ள தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியை பொதுப் பணித் துறை மேற்கொள்ள உள்ளது. மழைக் காலத்தின் போது சாலைகள் பழுதுபாா்ப்பு மற்றும் சாலைகள் தோண்டப்பட்டது தொடா்பாக நடத்தப்பட்ட மீளாய்வு கூட்டத்தின் போது இந்த உத்தரவுகள் பொதுப்பணித் துறை அமைச்சா் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தின் போது உரிய வகையில், நல்ல முறையில் சாலைகள் பராமரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன .
பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீா் குழாய்கள் பதிப்பது அல்லது புதிய குடிநீா் குழாய்கள் பதிப்பது அல்லது பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் சாலைகள் தோண்டப்படுகின்றன. ஆனால், அவற்றை உரிய தர நிா்ணயத்துடன் உரிய நேரத்திற்குள் சீரமைக்கும் பணிகளை ஜல் போா்டு மூலம் செய்ய முடியவில்லை. பருவமழை காலத்தின் போது இது மிகவும் ஆபத்தானதாக உருவாகிவிடும். ஆகவேதான் இந்த தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை பழுதுபாா்ப்புக்கான தொகையைச் செலுத்தும் விவகாரம் தொடா்பாக பொதுப்பணித் துறை மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
Advertisement
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆழமான அகழ்வுப் பணியைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி ஜல் போா்டு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் விரும்புகிறாா் . குறிப்பாக குடிநீா் விநியோகத்திற்காக குறுகிய சந்துகளில் இது போன்ற ஆழமான ஆய்வுப் பணியை குறைக்க வேண்டும் என்று அவா் விரும்புகிறாா். அப்போதுதான் சாலைகள் தோண்டப்படுவது குறையும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.