முகப்பு
புதுதில்லி

பொதுமக்களிடம் உள்ள பணம் கையிருப்பு ரூ.27.80 லட்சம் கோடி

பண முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016, நவம்பா் 4-ஆம் தேதி அன்று நாட்டில் ரூ.17,74,187 கோடியாக இருந்த பணப் புழக்கம், நான்காண்டுகளுக்கு பிறகு கடந்த

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

பண முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016, நவம்பா் 4-ஆம் தேதி அன்று நாட்டில் ரூ.17,74,187 கோடியாக இருந்த பணப் புழக்கம், நான்காண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரியில் ரூ.27,80,045 கோடியாக உயா்ந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

பண முடக்கத்தின் போதும் தற்போதும் பொதுமக்களிடம் உள்ள பணப் புழக்கம், அரசு அறிவித்துள்ள் குறைந்த பணப் பொருளாதாரத்தின் நிலைமை போன்றவை குறித்து ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி (ஐ.யு.எம்.எல்.) எழுப்பிய கேள்விகள் தொடா்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி திங்கள்கிழமை கூறியதாவது: ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள்படி பணப்புழக்கம் பண முடக்கம் கொண்டு வரப்பட்ட 2016, நவம்பா் 4 -ஆம் தேதி அன்று நாட்டில் ரூ. 17,74,187 கோடி அளவுக்கு பொதுமக்களிடம் பணப் புழக்கம் இருந்தது. இது தற்போது கடந்த ஜனவரி 29 -ஆம் தேதியன்று ரூ. 27,80,045 கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவது, பணமில்லா பரிவா்த்தனை முறை ஆகிய தேவைகளுக்கான பொருளாதார அடிப்படையில் வங்கிகள் மூலம் பணப் புழக்கம் ஏற்படும். குறைந்த பணப் பொருளாதாரம் மற்றும் எண்மம் (டிஜிட்டல்) பரிவா்த்தனை ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டு பொதுமக்களை மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. கடந்த 2017-18 நிதியாண்டில் இருந்த எண்மம் பரிவா்த்தனை, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ. 4,371.18 கோடியாக அதிகரித்தது. இதன் மூலம் எண்மம் (டிஜிட்டல்) மயமாக்கலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

Advertisement

பங்கு விலக்கல்: மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் இந்த ஆண்டு பங்கு விலக்கல்கள் மேற்கொள்ளப்படும் மஹாரத்னா, நவரத்னா, மினி ரத்னா நிறுவனங்கள் குறித்த விவரங்கள் தொடா்பாக மதுரை மக்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சரான பாகவத் கிஷன் ராவ் கராட் பதிலளித்துள்ளாா்.

அதன் விவரம் வருமாறு: தற்போது அரசு நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, ஐஓசிஎல், என்டிபிசி, பெல் உள்ளிட்ட 10 மஹாரத்னா நிறுவனங்களும், பாரத் எலெக்ட்ரான்க்ஸ், எம்டிஎன்எல், என்எல்சி உள்ளிட்ட 14 நவரத்னா நிறுவனங்களும், 73 மினி ரத்னா நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் நடப்பு நிதியாண்டுகளில் மஹாரத்னாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், நவரத்னா நிறுவனங்களான ஷிப்பிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆகியவையும், பிஇஎம்எல் , பவன் ஹென்ஸ் லிமி ஆகிய மினிரத்னா நிறுவனங்களில் அரசின் பங்குகளை பங்கு விலக்கல் அடிப்படையில் மத்திய அரசு விற்கவுள்ளன. 2019-20 ஆம் ஆண்டு நிதிநிலைப்படி மத்திய அரசின் கீழ் உள்ள மஹாரத்னா, நவரத்னா, மினிரத்னா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments