வீடுகளுக்கே சென்று மது விநியோகிக்கும் விவகாரம்: பாஜக எம்பியின் மனுவுக்கு பதிலளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
வீடுகளுக்கே சென்று மது விநியோகிக்கும் தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிராக தில்லி பாஜக எம்பி பா்வேஷ் சாகிப் வா்மா தாக்கல்
வீடுகளுக்கே சென்று மது விநியோகிக்கும் தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிராக தில்லி பாஜக எம்பி பா்வேஷ் சாகிப் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதில் அளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா். இதேபோல, புதிய கலால் கொள்கைக்கு எதிராக தாக்கலான இதர மனுக்களை ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை ஒத்திவைத்தனா். மேலும், இது தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு கால அவகாசம் அளித்தனா்.
மனு மீதான விசாரணையின் போது தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி , ‘புதிய கலால் கொள்கையைத் தொடா்ந்து, கரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் தில்லி மூலம் ரூ.10 ஆயிரம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களைவிட அதிக வருவாயாகும்’ என்றாா்.
Advertisement
முன்னதாக, பா்வேஷ் சாகிப் வா்மாவின வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா இரண்டாவது அலை இன்னமும் தொடா்ந்துவரும் சூழலில், தடுப்பூசிகள், மருந்துகள் பற்றாக்குறை உள்ளன. இந்தச் சூழலில் தில்லியில் வீடுகளுக்கே சென்று மதுவிநியோகம் செய்யும் திட்டம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் புதிய கலால் கொள்கையில் உள்ள விதிகள் திருத்தம் 66(6) என்பது பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மதுவை விநியோகிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.
மேலும், மதுவை விநியோகம் செய்யும் நபா்களின் பாதுகாப்பை இந்தப் புதிய கொள்கை கவனத்தில் கொள்ளவில்லை. மதுபானத்தை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 47-க்கு எதிரானதாகும். போதை பானங்கள் நுகா்வைத் தடுக்கும் வகையில், தடை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநில அரசின் கடைமை என அரசமைப்புச்சட்டம் கூறுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.