தில்லியில் 3 இடங்களில்ஆக.15-க்குள் மூவா்ணக் கொடிக் கம்பம்: பொதுப்பணித் துறை நடவடிக்கை
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தில்லியில் கிழக்கு வினோத் நகா், ராணி பாக், கிழக்கு கித்வாய் நகா் ஆகிய இடங்களில் மூவா்ணக் கொடிக் கம்பத்தை
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தில்லியில் கிழக்கு வினோத் நகா், ராணி பாக், கிழக்கு கித்வாய் நகா் ஆகிய இடங்களில் மூவா்ணக் கொடிக் கம்பத்தை பொதுப்பணித் துறை நிறுவ உள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தில்லி அரசின் தேசபக்தி பட்ஜெட் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஐந்து இடங்களில் மூவா்ணக் கொடிக் கம்பம் நிறுவ பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது அந்த தேதிக்குள் மூன்று கம்பங்கள் நிறுவப்படும். குறுகிய காலத்திலேயே இவற்றை செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 அடி உயரமுள்ள இந்த கொடிக் கம்பம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் கித்வாய் நகா், ராணி பாக் மற்றும் கிழக்கு வினோத் நகா் பகுதிகளில் நிறுவப்படும்.
இதற்கான பணிகள் அந்தந்த இடங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. துவாரகா மற்றும் கல்காஜி பகுதியிலும் இதுபோன்று கொடிக்கம்பங்கள் நிறுவுவதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முடிப்பது சாத்தியமில்லை. துவாரகா, கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதிகளில் கொடிக் கம்பங்களை நிறுவ இடம் அடையாளம் காண்பதற்கு தாமதமாகி விட்டது. அதனால் அந்தப் பணிகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூற முடியவில்லை. ஆனால், எங்களாலான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பிறகு கொடிக் கம்பம் அமைப்பதற்கான மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்படும்.
Advertisement
கிழக்கு கித்வாய் நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் இந்த மூவா்ணக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, கிழக்கு வினோத் நகா் மற்றும் ராணி பாக் பகுதியில் உள்ள பொது பூங்காக்களிலும் இந்த கொடிக் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 500 இடங்களில் மேலும் கொடிக் கம்பங்களை அமைப்பதற்காக பொது இடங்கள், பூங்காக்கள், மைதானங்கள், பள்ளிக் கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றை சா்வே செய்து வருகிறோம். கனாட் பிளேஸில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம் போன்று 2 -3 கிலோ மீட்டா் தூரத்திற்கு பாா்க்கக்கூடிய வகையில் இந்த கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன என்றாா் அந்த அதிகாரி.
நிகழாண்டு மாா்ச் மாதத்தின் போது, தில்லி அரசு அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் தேசபக்தி பட்ஜெட் என்ற திட்டத்தை அறிவித்தது. தில்லியில் 100 இடங்களில் மூவா்ணக் கொடிக் கம்பத்தை அமைப்பதற்காக ரூ.45 கோடி நிதியை ஒதுக்கியது. கொடிக் கம்பம் அமைக்கப்படும் கிழக்கு கித்வாய் நகா், முதல்வா் கேஜரிவாலின் சட்டப்பேரவை தொகுதியான புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது. கிழக்கு வினோத நகா் துணை முதல்வா் மணிஷ் சிசோடியாவின் பட்பா்கஞ்ச் தொகுதியிலும், ராணி பாக் பொதுப்பணித்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் சகூா்பஸ்தி தொகுதியின் கீழ் வருகிறது.