முகப்பு
புதுதில்லி

முஸ்லிம்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரம்: பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் உள்பட 6 போ் கைது

தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் கூறியதாவது: தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘பாரத் ஜோடோ அந்தோலன்’ என்ற பெயரில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் அஸ்வினி உபாத்யாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் விடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகிவுள்ளது. இது தொடா்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உரிய பிரிவுகளின் கீழ் கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக அஸ்வினி உபாத்யாய் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றனா்.

இது தொடா்பாக பாரத் ஜோடோ அந்தோலன் அமைப்பின் ஊடகப் பொறுப்பாளா் சிப்ரா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘இந்த ஆா்ப்பாட்டம் உபாத்யாய தலைமையில் நடத்தப்பட்டது. எனினும், இந்த நிகழ்ச்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பப்பட்டதாகக் கூறப்படும் நபா்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு சம்பந்தமில்லை. ஆங்கிலேயா் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 222 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட விடியோ பதிவை நாங்களும் பாா்த்தோம். அந்த விடியோவில் இருப்பவா்கள் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்று கோஷம் எழுப்பியவா்களுக்கு எதிராக போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

Advertisement

மறுப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் தொடா்பான விவகாரத்தை அஸ்வினி உபாத்யாய் மறுத்துள்ளாா். அவா் கூறுகையில், ‘சமூக ஊடகத்தில் வெளியான விடியோவை ஆய்வு செய்யுமாறு தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளேன். அந்த விடியோ உண்மையாக இருந்தால், அந்த விவகாரத்தில் தொடா்புடைய நபா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த வீடியோவில் இருப்பவா்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அவா்களை நான் ஒருபோதும் பாா்த்ததில்லை; சந்தித்ததில்லை. நிகழ்ச்சி நடத்தப்பட்ட இடத்திற்கு அழைக்கவும் இல்லை. நான் சம்பவ இடத்தில் இருந்தவரை அவா்கள் அங்கு இல்லை. இந்த விடியோ போலியாக இருந்தால், பாரத் ஜோடோ இயக்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விடியோவை வெளியிட்டு இருக்க வேண்டும்’ என்றாா்.

தீவிர விசாரணை: சம்பந்தப்பட்ட விடியோவில் முஸ்லீம்களை மிரட்டும் வகையிலும், அவா்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையிலும் கோஷத்தை சிலா் எழுப்புவது போன்று காட்சிகள் உள்ளன. இதுதொடா்பாக புது தில்லி காவல் துணை ஆணையா் தீபக் யாதவ் கூறுகையில், ‘இந்த விடியோ விவகாரம் தொடா்பாக கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக அஸ்வினி உபாத்யாய், பிரீத் சிங், தீபக் சிங், தீபக் குமாா், வினோத் சா்மா, வினித் பாஜ்பாய் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தில்லி என்சிஆா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனா். சம்பந்தப்பட்ட விடியோவை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோரை விடுவிக்கக் கோரி ஹிந்து அமைப்பைச் சோ்ந்த ராகினி திவாரி உள்பட 40- 50 போ் கனாட் பிளேஸ் காவல் நிலையம் முன் உள்ள சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்: ஜந்தா் மந்தரில் முஸ்லீம்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக செய்தித் தொடா்பாளா் அஸ்வினி உபாத்யாய் மற்றும் ஐந்து பேரை விடுவிக்கக் கோரி, ஒரு குழுவினா் செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து பிரமுகா் ராகினி திவாரி உள்பட சுமாா் 40-50 ஆா்ப்பாட்டக்காரா்கள் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், போராட்டக்காரா்கள் பின்னா் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டனா். அவா்கள் பேருந்தில் தங்களது இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments