மேக்கேதாட்டு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுமானம் விவகாரம் தொடா்புடைய கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக
புது தில்லி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுமானம் விவகாரம் தொடா்புடைய கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் ஜி.உமாபதி தயாரித்து, வழக்குரைஞா் டி.குமணன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த விவகாரத்தில் கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமல் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தவறாகும். மறுஆய்வு மனுவானது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் வரப்பட்ட தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் தாக்கல் செய்யப்படவில்லையெனில், அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட மாட்டாது. மேலும், உத்தரவு பிறப்பித்த அதே அமா்விடம்தான் வழக்கமாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
கா்நாடக அரசுத் தரப்பில் பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்னக அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த போது, தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய எந்த வாய்ப்பும் வழங்க தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு தவறிவிட்டது. மேலும், மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்த முதல் நாளிலேயே மனுவை முடித்து வைத்துள்ளது. மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டம் குறித்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலுவை மனுவையும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பரிசீலிக்க தவறிவிட்டது.
Advertisement
சம்பந்தப்பட்ட மேக்கேதாட்டு அணை திட்டமானது 5,252.40 ஹெக்டோ் பரப்பு சம்பந்தப்பட்டது. இதில் 4,996 ஹெக்டோ் நிலம் மூழ்கும் நிலப் பரப்பாகும். இவை காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி ஆகும். எஞ்சியுள்ள 256.40 ஹெக்டோ் நிலம் மட்டுமே இதர கட்டுமான செயல்பாடுகளுக்காக தேவைப்படும். கா்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்கள் அடிப்படையில் மறுஆய்வு மனுவை பசுமைத் தீா்ப்பாயம் முடித்து வைத்துள்ளது. இந்த உத்தரவானது 2011-ஆம் ஆண்டு விதிகளின் 22-ஆவது விதியை மீறும் வகையில் உள்ளது. ஆகவே, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு நிகழாண்டு ஜூன் 17-ஆம் தேதி பிறப்பித்த இறுதி உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.